பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19. வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள்[1]

முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள ஆறுபடை வீடுகளில் பழனியும் முக்கியமான இடம். மற்ற படைவீடுகளைப் போலவே பழனியும் மிகப் பழமையானது. சங்க காலத்திலே பழனி, பொதினி என்று பெயர் பெற்றிருந்தது. பொதினி என்னும் பெயர் பிற்காலத்தில் பழனி என்று மருவி வழங்குகிறது. பழனி (பொதினி)யைச் சூழ்ந்திருந்த நாடு அந்தக் காலத்தில் ஆவிநாடு என்றும் வையாவி நாடு என்றும் பெயர் பெற்றிருந்தது. ஆவி நாட்டையரசாண்ட அரசர் ஆவியர் என்றும் வையாவிக்கோ என்றும் வேள் ஆவி என்றும் பெயர் பெற்றிருந்தனர். மாமூலனார், வேள் ஆவியரசரையும் அவர்களுடைய பொதினியையும் கூறுகிறார்.

“வண்டுபடத் ததைந்த கண்ணி ஒண்கழல்
உருவக் குதிரை மழவர் ஓட்டிய
முருகன் நற்போர் நெடுவேள் ஆவி
அறுகோட் டியானைப் பொதினி
(அகம். 1 : 1-4)

என்றும்,

“முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பொதினி
(அகம்.61: 15-16)

என்றும் அவர் கூறுகிறார்.

ஆவி நாட்டில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை நக்கீரர், ‘ஆவினன் குடி முருகன்’ என்று கூறுகிறார். (‘ஆவினன்குடி அசைதலும் உரியன்’. திருமுருகாற்றுப்படை, 176)

பொதினி (பழனி)யும் வையாவி நாடும் இந்தக் காலத்திலே பாண்டி நாட்டிலே மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுகாவில் இணைந்திருக்கின்றன. சங்க காலத்திலே இவை கொங்கு நாட்டைச் சார்ந்திருந்தன. பழைய கொங்குநாட்டின் தென்கோடியிலே வையாவி நாடும் பொதினியும் அமைந்திருந்தன.


  1. பழனி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்புமலர். 2.9.1973.