பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
265
கடைச்சங்க காலத்திலே வையாவி நாட்டை அரசாண்ட வேள் ஆவிக் கோக்களில் பேர்போன அரசன் பேகன் என்பவன். அவனை வையாவிக் கோப் பெரும் பேகன் என்றும் கூறுவர். வையாவிக் கோப் பெரும் பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவனாகத் திகழ்ந்தான். புலவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அவன் பொன்னையும் பொருளையும் வழங்கினான். ஆகவே கபிலர் அவனைக் “கைவண் ஈகைக் கடுமான் பேகன்” என்று கூறுகிறார். (புறம் 144).
மேகம் சூழ்ந்து மழை பெய்கிறபோது மயில்கள் மகிழ்ச்சியினால் தோகையை விரித்து ஆடுவது இயல்பு. மேகத்தைக் கண்டால் மயில்களுக்கு மகிழ்ச்சியுண்டாகும். இந்த இயற்கையின்படி மயில் ஒன்று மழைகாலத்தில் தன் தோகையை விரித்து அசைந்து ஆடிற்று. அதனைக்கண்ட வையாவிக் கோப் பெரும்பேகன், அந்த மயில் குளிரினால் நடுங்கி வருந்துகிறது என்று கருதினான். கருதி, அந்த மயிலுக்குப் போர்வையை விரித்துப் போர்த்தினான். மகிழ்ச்சியினால் ஆடுகிற மயிலைக் குளிரினால் நடுங்குகிறது என்று கருதியது அவனுடைய அறியாமை என்று கருதுவதைவிட அவனுடைய வள்ளன்மையான அருள் உள்ளத்தைக் காட்டுகிறது என்று கருதுவது சிறப்பாகும். பாணர் அவனுடைய இந்தச் செயலைப் பாராட்டியுள்ளார்.
“மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக் கலிமான்பேகன்.”(புறம் 145)
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனாரும் தாம் பாடிய சிறுபாண் ஆற்றுப் படையில், பேகன் மயிலுக்குப் போர்வையளித்ததைக் கூறுகிறார்.
“வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகன்.” (சிறுபாண். 84-87)
வையாவிக் கோப்பெரும்பேகனுக்குக் கண்ணகி என்ற பெயர் கொண்ட மனைவி ஒருத்தியிருந்தாள். சங்க காலத்திலே கண்ணகி என்னும் பெயர் மகளிர்க்குப் பரவலாக வழங்கப்பட்டது. கண்ணகி என்பது கண்ணழகி என்பதன் திரிபு. மகளிரின் கண் அழகைச் சுட்டுகிற பெயர்களை மகளிர்க்குச் சூட்டுவது வழக்கம். இந்த வழக்கம் அக்காலத்திலும் இக்-