பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



கடம்பமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை யோடா வம்பலர்
தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட
சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்
புணர்ப் பொறைதாங்கிய வடுவாழ் நோன் புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தோடு வழங்கும்
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்
வில்லுடை வைப்பின் வியன்காட்டியவு'
(பெரும்பாண், 73-82)

வாணிகச் சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை மாங்குடி மருதனார் கூறுகிறார்.

'களரி பரந்த கல்நெடு மருங்கில்
விளரூன் தின்ற வீங்குசிலை மறவர்
மைபடு திண்டோள் மலிர ஆட்டிப்
பொறைமலி கழுதை நெடுநிரை தழீஇய
திருந்துவான் வயவர் அருந்தலை
துமித்த படுபுலாக் கமழும் ஞாட்பு.'
(அகம், 89: 9-14)

வேறு நாடுகளுடன் வாணிகம் செய்த வாணிகச் சாத்துக்கு அக்காலத்தில் அப்படிப்பட்ட துன்பங்கள் இருந்தன. அவர்களுடைய பொருளுக்கும் உயிருக்கும் ஆபத்து இருந்தது. அந்த ஆபத்துக்களையும் கருதாமல் அவர்கள் வாணிகம் செய்தார்கள். சாத்துக்களின் தலைவனான வாணிகனுக்கு மாசத்துவான் என்று பெயர் வழங்கிற்று. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்த மாசாத்துவர்களில் ஒருவன் கோவலனுடைய தந்தையாகிய மாசாத்துவானும் ஒருவன். அவன் சோழ அரசனுக்கு அடுத்த நிலையில் பெருங்குடி மக்களில் முதல் குடிமகனாக இருந்தான். அவனைச் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.

'பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோடு உயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க் காற்றும் மாசாத்துவா னென்பான்
இருநிதிக் கிழவன் மகன் ஈரெட்டாண் டகவையான்.'
(சிலம்பு, மங்கல வாழ்த்து)