பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
65
பொருட்டுத் தமிழ்நாட்டுக்கு வந்தபோது இச்சொல்லைத் தமிழர் அறிந்தனர். அறிந்து செய்யுட்களிலும் பயன்படுத்தினார்கள். 'யவனர் தந்த வினைமாண் நன்கலம்' (அகம். 149) “யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்” (புறம் 56). தமிழிலும் கலம் என்னுஞ் சொல் உண்டு. இத்தமிழ்ச் சொல் லுக்குப் பானை, சட்டி என்பது பொருள். ஒரே ஓசையுள்ளதாக இந்தச் சொல் இருந்தபடியால் தமிழர் அடைமொழி கொடுத்து இச்சொல்லை வெவ்வேறு பொருளில் பயன்படுத்தினார்கள். கிரேக்கச் சொல்லை மரக்கலம் என்றும் தமிழ்ச் சொல்லை மட்கலம் என்றும் கூறினார்கள்.
கன்னல் என்னுஞ் சொல்லும் கிரேக்க மொழியிலிருந்து தமிழில் கொள்ளப்பட்ட சொல். காலத்தையளக்குங் கருவிக்குக் கன்னல் என்று பெயர். மேலுங் கீழுமாக இரண்டு பாத்திரங்களை ஒன்றாக அமைத்து அதன் நடுவில் இருந்த சிறுதுளை வழியாக மேல் பாத்திரத்திலிருந்து நீர் கீழ்ப் பாத்திரத்தில் சொட்டுச் சொட்டாக விழும்படியமைப்பார்கள். விழுந்த நீரின் அளவைக் கொண்டு காலத்தையறிந்தார்கள். கன்னல் என்னும் இந்தக் கருவி யவன நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது.
‘பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப(முல்லைப்பாட்டு, 55-58)
தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க மொழிச் சொல் என்று சிலர் கூறுவர். அவர் கூற்று தவறு. தொல்காப்பியத் திலும் சங்கச் செய்யுட்களிலும் ஓரை என்னும் சொல் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இது தமிழ்ச் சொல். கிரேக்க மொழிச் சொல் அன்று. கிரேக்க மொழியில் வானநூல் சம்பந்தமாக ஹோரா என்னும் சொல் உண்டு. அது தமிழில் 'ஓரை' என்று வழங்கியதாகச் சிலர் கருது கின்றனர். முகுர்த்தம் என்னும் பொருளில் ஓரை என்னும் சொல் தமிழில் வழங்கவில்லை. தமிழில் வழங்கும் (ஓரை மகளிர்) ஓரை என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல் அன்று. தமிழ் இலக்கியங்களில் பயிலப்படுகிற ஓரை என்னுஞ் சொல் கிரேக்க 'ஹோரா' என்பதன் திரிபு என்று கருதுவது உண்மையறியாதார் கூற்று. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், இந்நூலாசிரியர் எழுதிய “சங்க காலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்” என்னும் நூலில் 20-34ஆம் பக்கங்களில் காண்க.