பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



அரிசி என்னும் தமிழ்ச் சொல் கிரேக்க, இலத்தீன் மொழிகளில் ஒரிஜா (Oryza) என்று வழங்கப்படுகிறது. இச்சொல்லை யவனர் தமிழிலிருந்து எடுத்துக் கொண்டனர். யவன வாணிகர், தமிழ்நாட்டு ஊர்களான சோழ பட்டினத்தைச் சோ பட்மா என்றும் காவிரியைக் கப்ரிஸ் என்றும் முசிறியை முசிரிஸ் என்றும் கருவூரைக் கரோரா என்றும் மதுரையை மதோரா என்றும் ஆய்நாட்டை ஆயோய் என்றும் கூறினார்கள்.

அந்தக் காலத்தில் எல்லா நாடுகளிலும் எண்ணெய் விளக்கு உபயோகிக்கப்பட்டது. மண்ணால் செய்த அகல் விளக்கையும், இரும்பினால் செய்த விளக்கையும் (இரும்பு செய் விளக்கு, நெடுநல்வாடை, 42) தமிழர் உபயோகித்தார்கள். யவன நாட்டிலிருந்து வந்த அன்னப் பறவையின் உருவமாக அமைக்கப்பட்ட ‘ஓதிம' விளக்கையும் பெண் வடிவமாக அமைத்த 'பாவை' விளக்கையும் தமிழர் உபயோகித்தார்கள். இவ்விளக்கைச் செல்வர் வாங்கி உபயோகித்தார்கள்.

'யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிர்எரி’

என்றும் (நெடுநல்வாடை 101:103), “பாவை விளக்கின் பரூஉச்சுடர் அவிழ” என்றும் (முல்லைப்பாட்டு 85) பாவை விளக்கு கூறப்படுகிறது. சிலப்பதிகாரமும் (5:154) மணிமேகலையும் (1:45) பாவை விளக்கைக் கூறுகின்றன. “யவனர் ஓதிம விளக்கைப்” பெரும் பாணாற்றுப்படை கூறுகிறது (வரி 316-317)

யவன வாணிகர் பொற்காசுகளையும் வெள்ளிக் காசுகளையும் கொடுத்துத் தமிழ்நாட்டுப் பண்டங்களை வாங்கிக்கொண்டு போனார்கள். யவனக் காசுகள் தமிழ்நாட்டிலே பல இடங்களில் கிடைக்கின்றன. அந்தப் பழங்காசுகள் தற்செயலாகப் பூமி யிலிருந்து அண்மைக் காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

பழைய தமிழ்நாடான சேர நாட்டிலே திருவனந்தபுரத்துக்கு வடக்கே 150 மைல் தூரத்தில் உள்ள பூஞ்சாரிலும் திருச்சூருக்கு வடமேற்கே 22 மைல் தூரத்திலுள்ள எய்யலிலும் 1945ஆம் ஆண்டில் உரோம தேசத்துப் பழங்காசுகள் கிடைத்தன. கொங்கு நாட்டில் கரூர், காட்டன் கன்னி, குளத்துப்பாளையம், பென்னார், பொள்ளாச்சி, வெள்ளலூர் முதலான இடங்களிலும் பாண்டி நாட்டில் மதுரை, கலியம்புத்தூர்,