பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4



‘யவனர் இயற்றிய வினைமாண் பாவை
கையேந் தையகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉத் திரி கொளீய குரூஉத்தலை நிமிர்ஒளி’
(நெடுநல்வாடை, 101-103)

என்று பாவை விளக்கைக் கூறுகிறார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் 'யவனர் ஓதிம விளக்’கைக் கூறுகிறார். ஓதிம விளக்கு என்பது அன்னப்பறவையின் உருவம் போன்றது. மீன்குத்திப் பறவை வேள்வித் துணிகள் மேல் அமர்ந்திருப்பது ‘யவனருடைய ஓதிம விளக்கு' போல இருந்தது என்று உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார் (பெரும்பாணாற்றுப் படை, 311-318). ஆனால் அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த யவனர் விளக்குத்துண்டு யவனருடைய பாவை விளக்கும் அன்று; ஓதிம விளக்கும் அன்று. அது சாதாரணமான கைவிளக்கின் உடைந்த பகுதி. இந்த விளக்கு கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்டது.

அரிக்கமேடு துறைமுகப் பண்டகசாலை கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தது என்பதற்கு மற்றொரு சான்று. அங்குக் கிடைத்த மட்பாண்ட ஓட்டில் எழுதியுள்ள பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்ட அக்காலத்து மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகள் அங்குக் கிடைத்தன. அவ்வோடுகளில் சிலவற்றின் மேல் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தன. அரிக்கமேட்டில் கிடைத்த பானையோடுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பதனால் அவை கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பானைகள் என்பது தெரிகின்றது. இவ்வாறு, அரிக்கமேடு கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்த துறைமுகப் பண்டக சாலை என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், 'ஏன்ஷியன்ட் இந்தியா' என்னும் வெளியீட்டின் இரண்டாவது எண்ணில் (பக்கம் 17 முதல் 124) கண்டு கொள்க.2

காவிரிப்பூம்பட்டினம்

சங்க காலத்திலே சோழ நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கிற புகர்முகத்தில் இருந்த காவிரிப்பூம்பட்டினம் அக்காலத்திலே உலக புகழ் பெற்றிருந்தது. காவிரிப்பூம்பட்டினத்துக்குப் புகார் என்னும் பெயர் உண்டு. பழைய பௌத்த மத நூல்களில் இது கவீரபட்டனம் என்று