பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4


நிலத்தேற்றவும், நிலத்தினின்று நீர்ப்பரப்பவும், அளந்தறியாப் பல பண்டம், வரம்பறியாமை வந்தீண்டி, அருங்கடிப் பெருங் காப்பின் வலியுடை வல்லணங்கினோன், புலி பொறித்துப் புறம் போக்கி, மதி நிறைந்த மலி பண்டம்” (பட்டினப்பாலை, 120-136) (உல்கு - சுங்கவரி)

காவிரியாற்றின் முகத்துவாரம் ஆழமாகவும் அகலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும் இருந்தது. வாணிகக் கப்பல்கள் பாய்களைச் சுருட்டாமலும் பாரத்தைக் கழிக்காமலும் நேரே ஆற்றினுள் புகுந்து துறைமுகத்தையடைந்தன.

'கூம்பொடு
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலம், தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியுங்
கடற்பல தாரத்த நாடுகிழ வோயே'
(புறம்:30)

என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்கிறார். துறைமுகத்தில் வந்து தங்கிய நாவாய்கள் (கப்பல்கள்), யானைப்பந்தியில் நிற்கும் யானைகள் அசைந்து கொண்டு நிற்பனபோல, அசைந்து கொண்டிருந்தன. பாய் மரத்தின் மேலே கொடிகள் பறந்தன.

'வெளில் இளங்கும் களிறு போலத்
தீம்புகார்த் திரை முன்துறைத்
தூங்கு நாவாய் துவன்றிருக்கை
மிசைக் கூம்பின் நசைக் கொடி'
(பட்டினப்பாலை, 172-175)

துறைமுகத்தை யடுத்த மருவூர்ப்பாக்கத்தில் அயல்நாடுகளிலிருந்து கப்பல் ஓட்டி வந்த மாலுமிகளும், கப்பலோட்டிகளும் கடற்கரைப் பக்கத்தில் தங்கியிருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தபடியால் வெவ்வேறு மொழிகளைப் பேசினார்கள். அவர்களில் யவனரும் (கிரேக்கர்) இருந்தார்கள்.

'மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்
முட்டாச் சிறப்பிற் பட்டினம்'
(பட்டினப்பாலை, 216-218)

என்று பட்டினப்பாலை கூறுகின்றது.