பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

83


ஆகவே கிழக்குக் கரைப்பக்கத்திலிருந்த சோழ நாட்டு வாணிகர் சாவக நாட்டிலிருந்து மிளகைக் கொண்டு வந்து விற்றார்கள். இந்த மிளகைத்தான் 'காலின் வந்த கருங்கறி மூடை' என்று கூறப் பட்டது. (கால் - காற்று, காலின் வந்த – காற்றின் உதவியினால் கப்பலில் வந்த)

வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் என்பன இமயமலைப் பக்கத்தில் கிடைத்த மணியும் பொன்னும். இவை வட இந்தியாவிலிருந்து கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடலில் வந்தவை. குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் என்பன மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (சைய மலைகள்) உண்டான சந்தனக் கட்டை, அகிற் கட்டையாகும். இதைத் தெய்வங்களுக்கும் மகளிர் கூந்தலை உலர்த்துவதற்கும் அக்காலத்தில் பெரிதும் உபயோகப்பட்டவை. சந்தனம் சாந்தாக அரைக்கப்பட்டு உடம்பில் பூசப் பட்டது. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கிடைத்தன. (இவையல்லாமல் ஆரமும் அகிலும் சாவக நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டன.)

தென்கடல் முத்து என்பது பாண்டி நாட்டுக் கடல்களில் (கொற்கை, குமரி முதலான இடங்களில்) உண்டான முத்து. பாண்டி நாட்டுக் கொற்கை முத்து உலகப் புகழ் பெற்றது.

குணகடல் துகிர் என்பது கிழக்குக் கடலில் உண்டான பவழம். (துகிர் - பவழம், குணகடல் - கிழக்குக் கடல்) சாவக நாட்டில், பசிபிக் மாக்கடல்களில் பவழப் பூச்சிகளால் உண்டான பவழங்கள் அந்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. (இவை யல்லாமல் மத்திய தரைக் கடலில் உண்டான பவழங்களை யவன வாணிகரும் மேற்கிலிருந்து கொண்டு வந்தனர்)

கங்கை வாரி என்பது வடக்கே கங்கையாற்றங்கரை மேலிருந்த பாடலிபுரம், வாரணாசி (காசி) முதலான ஊர்களிலிருந்துகொண்டு வரப்பட்ட பொருள்கள். அப்பொருள்களின் பெயர் கூறப்படவில்லை. காவிரிப் பயன் என்பது காவிரியாறு பாய்கிற சோழநாட்டுப் பொருள்கள். இவை உள்நாட்டுப் பொருள்கள். இவற்றின் பெயர் கூறப்படவில்லை. இவை ஏற்றுமதிக்காக இத்துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

ஈழத்து உணவு என்பது இலங்கையில் உண்டான உணவுப் பொருள்கள் (ஈழம் - இலங்கை). அந்த உணவுப் பொருள்களின் பெயரும் தெரியவில்லை.