86
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
இந்தோனேஷியா என்றும், கிழக்கிந்தியத் தீவுகள் என்றும் கூறப்படுகின்ற தீவுகள் அந்தக் காலத்தில் சாவக நாடு என்று கூறப்பட்டன. இங்குக் கூறப்பட்ட பொருள்கள் எல்லாம் அந்தக் காலத்தில் சாவக நாட்டுக்கேயுரியவை. இப்பொருள்கள் அந்தக் காலத்தில் வேறு எங்கும் கிடைக்காதவை. கீழ்க்கடல் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டுத் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதியான பொருள்கள் அகில், துகில், ஆரம், வாசம், கருப்பூரம் முதலானவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இவற்றை விளக்கிக் கூறுவோம்.
அகில்
இது ஒருவகை மரத்தின் கட்டை. நெருப்பில் இட்டுப் புகைக்கப்படுவது; புகை மணமாக இருக்கும். கோவில்களில் தெய்வங்களுக்கு நறுமணம் புகைக்கவும், மகளிர் கூந்தலுக்குப் புகைத்து மணமேற்றவும் மற்றும் சிலவற்றுக்கும் உபயோகிக்கப்பட்டது. அகில் மரங்கள் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையிலும் இருந்தன. ஆனால் சாவக நாட்டு அகில் தரத்தில் உயர்ந்தது, பேர் போனது. கிழக்குக் கோடி நாடுகளிலிருந்து வந்த காரகில் சிறந்தது என்பதைச் சிலப்பதிகாரம் “குணதிசை மருங்கில் காரகில்” என்று (சிலம்பு, 4:36) கூறுகின்றது. துகில்
துகில்
துகில் என்பது இங்குப் பட்டுத் துணிகளைக் குறிக்கிறது. சங்க காலத்தில் பட்டுத் துணிகள் சீன நாட்டில் மட்டும் கிடைத்தன. அக் காலத்தில் பட்டு வேறு எங்கும் கிடைக்கவில்லை. சீன நாட்டு வாணிகர் பட்டு முதலான பொருள்களைக் கப்பலில் ஏற்றிக் கொண்டு வந்து சாவக நாட்டில் (கிழக்கிந்தியத் தீவுகளில்) விற்றார்கள். அக்காலத்தில் சீனர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. சாவக நாட்டோடு நின்றுவிட்டார்கள். அவர்கள் சாவக நாட்டுக்குக் கொண்டு வந்த பட்டுகளைத் தமிழ்நாட்டு வாணிகர் அங்கிருந்து கொண்டு வந்து தமிழ்நாட்டில் விற்றார்கள். தமிழ் நாட்டிலிருந்து பட்டுத் துணியை மேல்நாட்டு வாணிகர் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்
ஆரம்
ஆரம் என்பது சந்தனம். சந்தன மரம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை (சய்ய மலை)களிலும் உண்டாயிற்று. ஆனால் இந்தச் சந்தனத்தைவிடச் சாவக நாட்டுச் சந்தனம் தரத்திலும் மணத்திலும் உயர்ந்தது.