பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

87


அது வெண்ணிறமாக இருந்தது. அகிற்கட்டையைப் போலவே சந்தனக் கட்டையும் சாவக நாட்டிலிருந்து அக்காலத்தில் இங்கு இறக்குமதி யாயிற்று.

வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள். அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ, தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை.

கருப்பூரம்

கருப்பூரம் என்பது சாவக நாட்டில் சில இடங்களில் உண்டான ஒருவகை மரத்தின் பிசின். கருப்பூரத்தில் பலவகையுண்டு. ஆகையினால் இது ‘தொடு கருப்பூரம்’ என்று கூறப்பட்டது. கருப்பூர வகைக்குப் பளிதம் என்றும் பெயர் உண்டு. ஒருவகைப் பளிதம் தாம்பூலத்துடன் அருந்தப்பட்டது. அது மணமுள்ளது, விலையுயர்ந்தது.

கிழக்குக் கடற்கோடியில் கடல் கடந்த சாவக நாட்டுத் தீவுகளில் உண்டான இந்தப் பொருள்கள் தொண்டித் துறைமுகத்தில் இறக்குமதி யானதைச் சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து அறிகிறோம். தொண்டித் துறைமுகத்தைப் பற்றி நாம் அறிவது இவ்வளவுதான்.

‘தொண்டியோர்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் தம்முடைய உரையில் ‘சோழ குலத்தோர்’ என்று உரை எழுதுகிறார். இது தவறு என்று தோன்றுகின்றது. தொண்டி இவர் காலத்தில் சோழர் ஆட்சிக்குக் கீழடங்கியிருக்கக்கூடும். ஆனால், சிலப்பதிகாரக் காலத்தில் தொண்டி, கூடல் (மதுரை) அரசனாகிய பாண்டியனுக்குக் கீழடங்கியிருந்தது. தொண்டியில் பாண்டிய குலத்து அரசன் ஒருவன் இருந்தான் என்று தோன்று கிறது. பாண்டி நாட்டின் முக்கியத் துறைமுகமாகிய கொற்கையில் பாண்டிய குலத்து இளவரசன் இருந்து போலவே, தொண்டித் துறைமுகப் பட்டினத்திலும் ஒரு பாண்டிய இளவரசன் இருந்திருக்கக் கூடும்.

தொண்டித் துறைமுகப் பட்டினம் பிற்காலத்தில் சிறப்புக் குன்றி இக்காலத்தில் குக்கிராமமாக இருக்கிறது.