பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

93


7. தமிழகத்தின் மேற்குக்கரைத் துறைமுகங்கள்

பாரத தேசத்தின் மேற்குக் கரையில் இருந்த பழைய காலத்துத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். அவை குடக்கடலின் (அரபிக் கடலின்) கரையில் இருந்தன. அக்காலத்தில் வடக்கே இருந்த பேர் போன துறைமுகம் மின்னகரம் என்பது. மின்னகரம் சிந்து நதி கடலில் சேரும் புகர் முகத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே புரோச் (Broach) என்னும் பாரிகச்சத் துறைமுகமும், சோபாரா 'சூரத்துத்' துறைமுகமும் இருந்தன. இந்தத் துறைமுகங்களில் அராபிய, யவன வாணிகர்கள் மேற்கிலிருந்து வந்து வாணிகம் செய்தார்கள். இந்தத் துறைமுகங்கள் அக்காலத்தில் அப்பகுதிகளை யரசாண்ட சதகர்ணி (சாதவாகன) அரசர்களுக் குரியவை. இந்தத் துறைமுகங்களைக் கைப்பற்றச் சாகர் என்னும் அரசர்கள் சதகர்ணி அரசர்களோடு அடிக்கடி போர் செய்து கொண்டிருந்தார்கள். இத்துறைமுகங்கள் சில காலம் சதகர்ணிகளுக்கும் சில காலம் சாகர்களுக்கும் உரியதாக இருந்தன. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் இவ்விதமாக இந்தத் துறைமுகப் பட்டினங்கள் ருவர் ஆட்சியிலும் மாறிக் கொண்டிருந்தன.

அக்காலத் தமிழகம், மேற்குக் கரையில் துளு நாட்டையும் (தென் கன்னட வடகன்னட மாவட்டங்கள்) தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழகத்தின் மேற்குக் கரையில் வடகோடியி லிருந்த அக்காலத்துத் துறைமுகப் பட்டினம் மங்களூர். மங்களூர் இப்போதும் சிறிய துறை முகமாக இருக்கின்றது. ஆனால் சங்க காலத்தில் அது பெரிய பேர் போன துறைமுகமாக இருந்தது. துளு நாட்டை அக்காலத்தில் நன்னன் என்னும் பெயருள்ள வேள் அரசர்கள் அரசாண்டார்கள். மங்களூருக்குத் தெற்கே இருந்த துறைமுகப் பட்டினம் நறவு. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்திருந்தது.

நறவுக்குத் தெற்கே தொண்டி, பரக்கே, நீல்கண்ட முதலான துறைமுகங்கள் இருந்தன. இவை சேர நாட்டைச் சேர்ந்த துறைமுகங்கள். இத்துறைமுகங்களைப் பற்றிக் கூறுவோம்.