பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

95


யுள்ளார். பிளைனி என்னும் யவனர் இதை நைத்ரியஸ் (Nitrias) என்று கூறியுள்ளார். நைத்ரியஸ் என்பது நேத்திராவதியாறு. நேத்திராவதி ஆற்று முகத்துவாரத்தில் இருக்கிறபடியால் இதை நைத்ரியஸ் என்று கூறினார் போலும். மேலும், இவர் இந்த இடத்தில் கடற்கொள்ளைக்காரர் இருந்தனர் என்றும் கூறுகின்றார். மங்களூருக்கு மேற்கே கடலில் ஒரு சிறு தீவில் குறும்பர்கள் இருந்தனர். அவர்கள் கடம்ப மரத்தைக் காவல் மரமாக வளர்த்திருந்தார்கள். அவர்கள் வாணிகத்துக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கொள்ளையடித்தனர். அதனால் சேரநாட்டுத் துறைமுகப்பட்டினங்களுக்கு யவனக் கப்பல்கள் வருவது தடைப்பட்டது. அப்போது, இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் இளைய மகனான செங்குட்டுவன் தலைமையில் கடற்படையையனுப்பிக் கடற்கொள்ளைக் குறும்பரையடக்கினான். இச் செய்திகளைப் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்து, ஐந்தாம் பத்துகளால் அறிகின்றோம்.

நறவு

துளு நாட்டிலே மங்களூர்த் துறைமுகத்துக்குத் தெற்கே நறவு என்னும் துறைமுகப் பட்டினம் இருந்தது. இதுவும் துளு நாட்டைச் சேர்ந்தது. துளுநாட்டு நன்னன் ஆட்சியில் இது இருந்தது. நறவு என்னும் சொல்லுக்கு கள், மது என்னும் பொருளும் உண்டு. ஆகையால் நறவு என்னும் பெயர் உள்ள இந்தப் பட்டினத்தைத் தமிழ்ப் புலவர் 'துவ்வா நறவு' (உண்ணப் படாத நறவு) என்று கூறினார். சேர மன்னர் துளு நாட்டு நன்னனைவென்று துளுநாட்டு ஆட்சியைக் கைக்கொண்ட போது, ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் (சேரன் செங்குட்டுவனுடைய மாற்றாந் தாயின் மகன்) இந்த நறவுத் துறைமுகப் பட்டினத்தில் இருந்தான் என்று பதிற்றுப் பத்து (6 ஆம் பத்து 10 ஆம் செய்யுள்) கூறுகின்றது. யவன நாட்டுக் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். அவர்கள் நறவை நவ்ரா என்று கூறினார்கள்.

தொண்டி

இது மேற்குக் கடற்கரையில் சேர நாட்டில் இருந்த தொண்டி. (பாண்டி நாட்டில், கிழக்குக் கடற்கரையிலும் ஒரு தொண்டி இருந்தது) ஐங்குறுநூற்றில் நெய்தற் பத்தைப் பாடிய அம்மூவனார் தொண்டிப் பத்து என்னும் தலைப்பில் பத்துச் செய்யுட்களைப் பாடியுள்ளார். இவர் பாடிய தொண்டி இந்தச் சேர நாட்டுத் தொண்டியாகும். இந்தத் தொண்டிப் பட்டினம் கொங்கு நாட்டை யரசாண்ட பொறையர்களின்