பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. திருப்பரங்குன்றத்துப் பிராமி எழுத்து

மதுரைநகரத்துக்கு அருகிலே பேர்போன திருப்பரங் குன்றமலையும் அதன் அடிவாரத்தில் திருப்பரங்குன்றம் என்னும் ஊரும் இருக்கின்றன. திருப்பரங்குன்றில் தொன்றுதொட்டு முருகக்கடவுள் எழுந்தருளியிருக்கிறார். நக்கீரனார் தம்முடைய திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றத்தையும் பாடியுள்ளார். அவர் காலத்தில், கூடலுக்கு (மதுரைக்கு) மேற்கே திருப்பரங்குன்றம் இருந்தது என்று (மாடமலி மறுகில் கூடல் குடவாயின்) அவர் கூறியுள்ளார்.

கடைச்சங்கப் புலவர்களில் சிலர் திருப்பரங்குன்றத்து முருகப் பெருமானைப் பரிபாடலில் பாடியுள்ளனர். பரிபாடல் 8ஆம் பாட்டை நல்லந்துவனாரும், 9ஆம் பாட்டைக் குன்றம்பூதனாரும், 17ஆம் ம் பாட்டை நல்வழுதியாரும்,19 ஆம் பாட்டை நப்பண்ணனாரும்,21 ஆம் பாட்டை நல்லச்சுதனாரும் பரங்குன்றத்து முருகவேளினைப் பாடியுள்ளனர்.

பரங்குன்ற மலையில் பாறைகளிலும் பொடவுகளிலும் சைன சமயதீர்த்தங்கரர்களின் திருமேனிகளும் அருகில் வட்டெழுத்து வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இடைக்கால நூற்றாண்டு களில் பொறிக்கப்பட்டுவை. மலை உச்சியில் கடைச்சங்க காலத்தில் பௌத்த - சமணசமயத் துறவிகள்தங்கியிருந்த இரண்டு குகைகளும் அவற்றில் கற்படுக்கைகளும் பிராமிக் கல்வெட் டெழுத்துக்களும் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்குக் கூறுவோம்.

முதலாவது குகை: இது திருப்பரங்குன்றம் இரயில் நிலையத் துக்கு அருகே சாவடி என்னும் கிராமத்துக்கு அருகில் இருக்கிறது. மலைமேல் இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகைக்குப் போவதுகடினம். குகைக்கு ஏறிச் செல்வதற்குக்கரடு முரடான துளைகள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் வழியாகக் கால் வைத்து ஏறிச் சென்றால் மேலே வடக்குத் தெற்காக அமைந்துள்ள குகையைக் காணலாம். இந்தக் குகை 56 அடி நீளமும் 20 அடி அகலமும் உள்ளது.