பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. எழுத்து ஆக்கம்*

பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே மனிதன் பேசக் கற்றுக் கொண்டான். அஃதாவது, தன் எண்ணங்களைப் பேச்சின் மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்டான். மனிதன் கற்றுக்கொண்ட பேச்சு அவனை மிருகத்தன்மையிலிருந்து மனிதத் தன்மைக்கு உயர்த்தி விட்டது. பின்னும், பல காலம் சென்ற பிறகு மனிதன், தன் எண்ணங் களையும், கருத்துக்களையும், எழுத்து மூலமாகப் பிறருக்குத் தெரிவிக்க முயற்சி செய்தான். முயற்சி செய்து அதில் வெற்றி அடைந்தான். எழுத்துக்களைக் கண்டுபிடித்து அதன் மூலமாகத் தன் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரிவிக்கக் கற்றுக்கொண்ட வித்தையானது, மனிதனை மிக உயர்ந்த நாகரிகத்தை அடையச் செய்துவிட்டது. எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ளாமல், வெறும் பேச்சோடு மட்டும் நின்று விட்டிருந்தால், இப்போது மனிதன் அடைந்திருக்கிற உயர்ந்த நாகரிக நிலையை அடைந்திருக்க முடியாது.

எழுத்தைக் கண்டுபிடித்த ஆதிகாலத்து மனிதர், இப்போது உலகத்திலே வழங்குகிற ஒலி எழுத்துக்களைக் கண்டுபிடிக்க வில்லை. அஃதாவது, தனித்தனியாக ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு எழுத்தைக் கண்டுபிடிக்கவில்லை. உருவங்களைச் சித்திரம் வரைவது போல வரைந்து அவற்றின் மூலமாக அக்காலத்து மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுக்குத் தெரிவித்து வந்தார்கள். தி காலத்திலே சித்திர எழுத்துக்களைப் பல நாட்டினரும் எழுதிக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஆர்க்கியாலஜி, எபிகிராபி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. எகிப்து தேசத்திலும் சீன தேசத்திலும் அமெரிக்காக் கண்டத்து மெக்ஸிகோ நாட்டிலும் நமது இந்தியா தேசத்திலும் ஆதிகாலத்தில் ஓவிய எழுத்துக்கள் வழங்கி வந்தன.

நமது இந்தியா தேசத்திலே சிந்து நதிக்கரையில் மொஹஞ்ச தாரோ, ஹாரப்பா என்னும் பெயருள்ள இரண்டு நகரங்கள் சுமார் 6

  • அகில இந்திய வானொலியில், சென்னை நிலையத்தில் ஒலிபரப்பப்பட்டது. இசைவு பெற்று வெளிவருகிறது.
  • செந்தமிழ்ச் செல்வி.சிலம்பு. 25. 1949. வெளி வந்தது.