பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

கோடக்ஸ் புத்தகம்

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

தொடக்கத்திலே நெடுங்காலம் வரையில், பேபரைஸ் நீண்ட சுருளைகளாக அமைந்திருந்தன. பேபரைஸ் சுருளையை முழுவதும் பிரித்துப் பார்த்தால் அன்றி, குறிப்பிட்ட ஒரு பகுதியை வாசிக்க இயலாது. இந்தச் சங்கடத்தைப் போக்குவதற்குப் பிற்காலத்திலே, புத்தக அமைப்பில் பேபரைஸ் தாள்களை அமைத்தனர். ஒரே அளவாக உள்ள பேபரைஸ் தாள்களை இரண்டிரண்டாக மடித்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி ‘பைண்ட்' செய்தனர்; அதாவது, தற்காலத்திய புத்தக உருவத்தில் அமைத்தனர். இவ்வாறு அமைக்கப்பட்ட பேபரைஸ் புத்தகங்களை எளிதாகப் புரட்டித் தமக்கு வேண்டிய பகுதியை எடுத்து வாசிக்கலாம். இத்தகைய சுவடிகளுக்கு கோடக்ஸ் (Codex) என்பது பெயர். கோடக்ஸ் அல்லது கௌடஸ் என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்குப் பொருள், மரப்பலகை என்பது. மெல்லிய பலகைகளாக அறுக்கப்பட்ட சிறு பலகைகளை நன்றாக இழைத்து, அதன்மேல் மெழுகைப் பூசி, அதில் கூரிய ஆணியால் கடிதம் எழுதுவது ரோமரது பண்டைக் காலத்து வழக்கம். இவ்வாறு அமைக்கப்பட்ட பலகைகளைக் கோடக்ஸ் என்று வழங்கினர். பிறகு, புத்தக வடிவில் அமைக்கப்பட்ட பேபரைஸ் சுவடிகளுக்கும் கோடக்ஸ் என்னும் பெயர் வழங்கப்பட்டது.

தோல் புத்தகம்

எகிப்து நாடு வெப்பமுள்ள நாடு. அதைவிட வெப்பம் குறைந்த கிரேக்கம், இத்தாலி முதலிய தேசங்களில் பேபரைஸ் விரைவில் கெட்டுப்போனபடியால், அந்நாட்டார் வேறு எழுது கருவிகளைத் தேடலாயினர். மிருகங்களின் தோல்கள், பேபரைஸுக்குப் பதிலாக உபயோகப்படுத்தப்பட்டன. எகிப்து தவிர ஏனைய மத்தியதரைக் கடல் ஓரத்திலுள்ள நாடுகள் தொன்றுதொட்டுத் தோலை எழுது கருவியாக வழங்கிவந்தன. பிறகு, பேபரைஸ் உபயோகப் படுத்தப்பட்டது. பேபரைஸ் விரைவில் கெட்டுப்போவதைக் கண்ட பிறகு, இவர்கள் தோலையே மீண்டும் எழுது கருவியாகப் பயன் படுத்தினர். எகிப்திலுங்கூடத் தோல் எழுதுகருவியாகப் பிற்காலத்தில் பயன் படுத்தப்பட்டது. ஆனாலும், பேபரைஸ் அடியோடு வழக்கொழிந்து விடவில்லை. இரண்டும் கையாளப்பட்டு வந்தன.