பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

சங்க காலத்தில் வழங்கி வந்த தமிழ் எழுத்து எது?

வட்டெழுத்து என்னும் ஒருவகையான எழுத்து முற்காலங் களில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தது. வட்டெழுத்து வழங்குவதற்கு முன்பு பிராஃமி எழுத்து சங்க காலத்தில் வழங்கிவந்தது என்பதை இப்போது அறிகிறோம். மலைக் குகைகளிலே பாறைக் கற்களில் செதுக்கி வைக்கப்பட்டுள்ள பிராஃமி எழுத்துக்களிலிருந்து வட்டெழுத்துக்கு முன்பு பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கி வந்தது என்பதை அறிகிறோம்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாரத தேசத்தை அரசாண்ட அசோக சக்கரவர்த்தி காலத்தில் பிராஃமி எழுத்து தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. அதாவது கடைச்சங்க காலத்திலே பிராஃமி எழுத்து தமிழகத்தில்

வழங்கப்பட்டது என்பது தெரிகின்றது. இப்போது தமிழ்நாட்டில் கிடைக்கிற பிராஃமி எழுத்துக்கள் தமிழ் நாட்டுப் பெளத்த ஜைன மதத்தார்களால் எழுதப்பட்டவை. பௌத்த ஜைனர் காலத்துக்கு முன்பு, அதாவது பிராஃமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் என்ன எழுத்து வழங்கி வந்தது?

தமிழர்களுக்கு வேறு எழுத்து இல்லை என்றும் பிராஃமி எழுத்தைத்தான் தமிழர்களும் கைக்கொண்டார்கள் என்றும், தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு முதலிய சங்கநூல்கள் எல்லாம் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இவ்வாறு கூறுகிறவர்கள், (பிராஃமி எழுத்து கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு), தொல்காப்பியம் முதலிய சங்க காலத்து நூல்கள் வட்டெழுத்தினால் எழுதப்பட்டன என்று கூறி வந்தார்கள். இப்போது பிராஃமி எழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்தது என்பது தெரிந்த பிறகு, தொல்காப்பியம் முதலிய சங்க நூல்கள் பிராஃமி எழுத்தினால் எழுதப்பட்டவை என்று கூறுகிறார்கள்.

இன்னொரு சாரார், பிராஃமி எழுத்துக்கு முன்பு ஏதோ ஒரு வகையாக எழுத்து சங்க காலத்தில் வழங்கி வந்தது என்றும், பிராஃமி எழுத்து வந்த பிறகு அந்த பழைய எழுத்து மறைந்துவிட்டதென்றும் கூறுகிறார்கள். அந்தப் பழைய எழுத்து இன்ன உருவமுடையது என்பது தெரியவில்லை.