பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. இலக்கியத்தில் நடுகல்*

உலகத்திலே எல்லா நாடுகளிலும் வீரர்களைப் போற்றினார்கள். எல்லா நாட்டிலும் வீரர்களுக்குத் தனிச் சிறப்பு இருந்தது. பழந்தமிழ் நாட்டிலே வீரர்களுக்குத் தனிச் சிறப்பு இருந்தது. பழந்தமிழர் போரைப் பற்றித் தனி இலக்கணம் எழுதினார்கள். போரைப் பற்றிய இலக்கியங் களும் இருந்தன. அவற்றிற்குப் புறப்பொருள் என்று பெயரிட்டிருந் தார்கள். தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல்களும், புறநானூறு போன்ற இலக்கிய நூல்களும் தமிழில் உண்டு. போர்முறையை ஏழு விதமாகப் பிரித்திருந்தார்கள். நிரை (பசு மந்தை) கொள்ளுதல் வெட்சி என்றும், நிரைமீட்டல் கரந்தை என்றும் பெயர் பெற்றன. நாட்டைப் பிடிக்க ஓர் அரசன் படையெடுத்துப் போருக்கு வரும்போது அவனை எதிர்த்துப் போர் செய்து தன் நாட்டைக் காப்பாற்றுவான் அந்த நாட்டரசன். இவ்விரு அரசருக்கும் நடக்கும் போருக்கு வஞ்சிப்போர் என்பது பெயர். ஓர் அரசன் பகை யரசனுடைய கோட்டைமேல் படையெடுத்துச் சென்று கோட்டை மதிலைச் சூழ்ந்து முற்றுகையிடுவது உழிஞைப்போர் என்று பெயர் பெற்றது. முற்றுகையிடப்பட்ட மதிலுக்குள்ளிருக்கும் அரசன் கோட்டைக் குள்ளிருந்து போர் புரிவது நொச்சிப்போர் என்று பெயர் பெற்றது. இரண்டு அரசர்கள் தம்முடைய வீரத்தைக் காட்ட போர் செய்வது தும்பைப் போர் என்று பெயர் பெற்றது. இவற்றைத் தவிர வாகைப் போர் என்று ஒரு வகைப் போர் உண்டு. இது அரசர், போர் வீரர்களுக்கு மட்டு மல்லாமல் இசை பாடுதல், யாழ் வாசித்தல், நாட்டியம் ஆடுதல், சேவல் போர், காடைப் போர், தகர் (ஆடு) போர் முதலிய ஏனை யோருக்கும் பொதுவானது. இவ்வாறு பலவகையான போர்முறைகள் பழந்தமிழ் நாட்டில் இருந்தன. போர்க்காலங்களிலே வீரப்போர் செய்து பின் வாங்காமல் உயிர் நீத்த வீரர்களுக்கு நடுகல் நட்டு; அவ் வீரர்களுக்குச் சிறப்பு செய்தார்கள். வீரக்கல் நடுகிற வழக்கம் மிகப் பழங்காலந் தொட்டு இருந்தது. பழங்காலத்தில் நடப்பட்ட ஆயிரக் கணக்கான நடுகற்கள் தமிழ் நாட்டிலே பல இடங்களிலே காணக்கிடக் கின்றன. தொல் பொருள் ஆய்வுத் துறையினர் நடுகற்கள் பலவற்றைக்

+

Seminar on Hero -stones, தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு 1974.