பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

கரந்தைப் போரில் வெற்றியோடு உயிர்விட்ட வீரர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்கள் ஏராளமாக உள்ளன. அவர்களைப் பற்றிய செய்யுட்களும் இலக்கியங்களில் பல உள்ளன. அச்செய்யுட்களை யெல்லாம் இங்குக் காட்ட வேண்டுவது இல்லை. ஆனால், ஒரு செய்யுளை மட்டும் கூறி மேற் செல்லுவோம். வடமோதங்கிழார், கரந்தைப் போரில் ஒரு வீரன் ஆனிரைகளைப் பகைவரிடமிருந்து மீட்டின பின்பு அவனுடைய உடல் முழுவதும் பகைவருடைய அம்பு தைத்து அவன் இறந்து போனதைக் கூறுகிறார். சந்திர கிரகணத்தின் போது, முழு நிலாவைப் பாம்பு விழுங்கி விட, அதன் வாயிலிருந்து சந்திரன் மிக அரிதின் முயன்று வெளிப்பட்டது போல, அந்த வீரன் தன் ஊர் ஆனிரைகளைப் பகை வீரரிடமிருந்து கடும் போர் செய்து மீட்டுக் கொண்டான். ஆனால் அந்தோ! அவன் உடம்பு முழுவதும் பகை வீரர்கள் எய்த அம்புகள் தைத்துவிட்டன. அவன் உயிரானது பாம்பு தன் தோலை உரித்துப் போட்டுவிட்டுப் போய்விட்டது போல, அவனுடைய உடம்பை விட்டுப் பிரிந்து வீரசுவர்க்கத்துக்குப் போய்விட்டது. உயிர் போய்விட்டபடியால், அவனுடைய உடம்பு, அம்புகள் தைத்த இலக்கு மரம்போலக் காணப்பட்டது. அவனுடைய பெயரும் புகழும் அவனுடைய நடுகல்லில் எழுதப்பட்டு விளங்கிற்று என்று அப்புலவர் அழகான ஒரு செய்யுளில் கூறுகிறார்.

முன்னூர்ப் பூசலில் தோன்றித் தன்னூர் நெடுநிரை தழிஇய மீளியாளர்

விடுகணை நீத்தம் துடிபுணை யாக வென்றி தந்து கொன்று கோள்விடுத்து (வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின்) மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த உரையன் ஆகி உரிகளை அரவம் மானத் தானே அரிது செல் உலகிற் சென்றனன் உடம்பே, கானச் சிற்றியாற்று அருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி ஆண்டொழிந் தன்றே உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடஞ்சால் மஞ்ஞை ஆணி மயிர் சூட்டி இடம் பிறர் கொள்ளாச் சிறுவழிப்

படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே. (புறம். 260 : 12-28)