பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சங்க காலத்துப் பாண்டிய அரசனின்

பிராமி எழுத்துச் சாசனம்*

கடைச் சங்க காலத்துச் சேர அரசர்களைக் கூறுகிற பிராமி எழுத்துச் சாசனத்தைப் பற்றிச் சென்ற இதழில் எழுதினோம். இந்த இதழிலே கடைச் சங்க காலத்துப் பாண்டியனைக் கூறுகிற பிராமி எழுத்துச் சாதனத்தைப் பற்றிக் கூறுவோம்.

பாண்டி நாட்டிலே மதுரை மாவட்டத்து மதுரைத் தாலுகா விலே மதுரை நகரத்துக்கு அருகிலே உள்ள மாங்குளம் என்னும் ஊரிலேயுள்ள மலைப்பாறை யொன்றிலே இந்தப் பிராமி எழுத்துச் சாசனம் செதுக்கியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சாசனம் வேறு சாசனங்களுடன் எபிஃகிராபி (சாசன) இலாகாவின் 1906-ஆம் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கிறது. (460-465 of 1906, 242 of 1963-64) இந்த சாசனம் கண்டுபிடிக்கப்பட்டு அறுபது ஆண்டுகளாகி யும், இந்தச் சாசனத்தைச் சாசன இலாகா வாசித்து வெளியிடாமலே இருந்திருக்கிறது! சமீப காலத்தில்தான் இச்சாசனம் முதன்முதலாகத் திரு. ஐ. மகாதேவன் அவர்களால் படித்து வெளியிடப்பட்டது.

மேலே கூறிய இடத்தில், இயற்கையாக அமைந்துள்ள குகைவாயிலின் மேற்புறத்துப் பாறையின் மேலே முன்பக்கத்தில் இந்தச் சாசனம் பெரிய எழுத்துக்களால் ஒரே வரிசையாக எழுதப் பட்டிருக்கிறது. இக்குகையிலே அக்காலத்தில் வசித்திருந்த பௌத்த அல்லது ஜைன (சமண) முனிவர் படுப்பதற்கு ஏற்றதாக இக்குகையின் கற்றரை மழமழவென்று அமைக்கப்பட்டிருக்கிறது. அக்காலத்து பௌத்த ஜைன முனிவர்கள் ஊரில் தங்கி வசிக்காமல், ஊருக்கப்பால் மலைக்குகைகளிலே தங்கி வசிப்பது வழக்கம். அவர்களுக்கு வசதியாக இருக்கும்படி கற்படுக்கைகளை மழமழப்பாக அமைத்துக் கொடுப்பது ஊரார் கடமை. அந்த முறைப்படி ஒருவர் இந்தக் குகையிலே கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்து அக்குகை வாயிலின் மேற்புறத்தில் இந்தப் பிராமி எழுத்துச் சாசனத்தை எழுதிவைத்தார். இந்தச் சாசனம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் * கல்வி - இதழ். டிசம்பர். 1966.