பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

சக்கரவர்த்தி காலத்தில் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலே அசோக சக்கரவர்த்தி காலத்திலே பௌத்த பிக்ஷுக்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார்கள். அவர்கள் பிராஃமி எழுத்துக்களைத் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். பிராஃமி எழுத்துக்கள் தமிழ்நாட்டிலே கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரையில் வழங்கி வந்தன. எனவே, இந்தக்குகையில் பிராஃமி எழுத்துக்கள் காணப்படுவதனாலே, ஏறக்குறைய 2000 ஆண்டு களுக்கு முன்பு இவ் வெழுத்துக்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கருதலாம். படுக்கைகளில் ஓரிடத்தில் ஓர் ஆள் நின்று கொண்டு கைகளை மார்பில் வைத்து வணங்குவது போலக் கோட்டுச் சித்திரம் வரையப்பட்டிருக்கிறது. இன்னோர் இடத்தில் சூலம் போன்ற வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. குகைக்கு வெளியே யுள்ள பெரிய பாறைக் கல்லில் மண்டலம் போன்ற ஓர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. அரசாங்க சாசன இலாகாவும், பழம்பொருள் ஆராய்ச்சி இலாகாவும் (எபிகிராபி, ஆர்க்கியாலஜி இலாகாக்கள்) இதுவரையில் இந்த இடத்தைக் கண்டுபிடிக்கவும் இல்லை. எழுத்துக்களைப் படி எடுக்கவும் இல்லை.

இந்த இடத்துக்குப் போக நல்லபாதை அமைத்து, இந்தக் குகையையும், இதிலுள்ள எழுத்துக்களையும் பாதுகாப்புப் பழம் பொருள்கள் என்று அரசாங்கத்தார் தெரிவிக்க வேண்டும். இந்தப் பிராஃமி எழுத்துக்களில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது இன்னும் படிக்கப்படவில்லை. இத்துறையில் வல்லவர்கள் இதனை செய்வார்கள் என்று நம்புகிறோம்.

இந்த ஆண்டிபாறைக்குச் சற்றுத் தூரத்தில் அதே மலையில் இன்னொரு குகையும் அதில் எழுத்துக்களும் இருக்கின்றனவாம். அந்தக் குகை மிகவும் ஆபத்தான இடத்தில் இருப்பதனால் நாங்கள் அங்குப் போகவில்லை. சமயம் வாய்க்கும்போது மற்றொரு சமயம் போகக்கூடும்.

பாண்டிநாட்டு மலைகளிலே பிராஃமி எழுத்து சாசனங்கள் சில முன்னமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொங்கு நாட்டிலே பிராஃமி எழுத்துச் சாசனம் இப்போதுதான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சாசன எழுத்தையும், குகையையும் பாதுகாப்புச் சட்டத்தின்படி அரசாங்கத்தார் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.