பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள் 25

பௌத்த, சமண சமயங்களை வளர்த்த பௌத்த பிக்குகளும் சமண முனிவர்களும் தங்கியிருந்த இடங்களுக்குப் பள்ளி என்பது பெயர். அவர்கள், ஊர்ச் சிறுவர்களைத் தம்முடைய பள்ளிகளுக்கு அழைத்து அவர்களுக்குக் கல்வி கற்பித்தார்கள்; பள்ளிகளில் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்தபடியால் பாடசாலைகளுக்குப் ‘பள்ளிக்கூடம்’என்று புதிய பெயர் ஏற்பட்டது. அப் பெயர் இன்றளவும் வழங்கி வருகிறது. பள்ளிக்கூடங்களில் அவர்கள் பழைய தமிழ் எழுத்தைக் கற்பித்தார்கள். மத நூல்களைப் படிப்பதற்காகச் சிறுவர்களுக்குப் பிராமி எழுத்தையும் கற்பித்தார்கள். காலப் போக்கில் பழைய தமிழ் எழுத்து பையப்பைய மறைந்து போய்ப் புதிய பிராமி எழுத்து பரவத் தொடங்கியது. பழைய தமிழ் எழுத்து மறைந்துவிடவே புதிய பிராமி எழுத்து நாட்டில் பயிலப்பட்டது. தமிழ்நூல்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டன. பிராமி எழுத்து கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையில் வழங்கி

வந்தது.

வட்டெழுத்து

அதன் பிறகு பிராமி எழுத்து வரி வடிவத்தில் மாறுதல் அடையத் தொடங்கி வட்டெழுத்தாக உருவடைந்தது. பிராமி எழுத்து திரிபடைந்த உருவமே வட்டெழுத்தாகும். வட்டெழுத்து ஏறத்தாழ கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரையில் தமிழகத்தில் வழங்கிற்று. அப்போது சுவடிகளும், கல்வெட்டுக்களும், வட்டெழுத்திலும் எழுதப்பட்டன. பல்லவ அரசர் காலத்தில் தொண்டை நாட்டிலும், சோழ நாட்டிலும், வடடெழுத்து மறைந்து வேறுவகையான பல்லவர் எழுத்து வழங்கி வந்தது. ஆனால், வட்டெழுத்து பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும் தொடர்ந்து வழங்கி வந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில், சோழர், பாண்டியரை வென்று அரசாண்ட காலத்தில் பாண்டி நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்தை மாற்றிச் சோழர் இக் காலத்துத் தமிழெழுத்தைப் புகுத்தினார்கள். ஆகவே, ஆகவே, 10ம் நூற்றாண்டுக்குப் பிறகு பாண்டி நாட்டில் வட்டெழுத்து மறைந்து போயிற்று. சேர நாட்டில் வழங்கி வந்த வட்டெழுத்து பிற்காலத்தில் மாறுதல் அடைந்து கோலெழுத்தாக உருவம் பெற்றது. அண்மைக் காலத்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டில், மலையாள மொழியின் தந்தை என்று கூறப்படுகிற துஞ்சத்து இராமாநுசன் எழுத்தச்சன், கிரந்த