பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

எழுத்திலிருந்து' இப்போதைய மலையாள எழுத்தை உண்டாக்கினார். அதன் பிறகு மலையாள நாட்டில் கோலெழுத்தும் மறைந்து போயிற்று.

நான்குவகை எழுத்துக்கள்

தொடக்க காலத்திலிருந்து இன்று வரையில் தமிழர் நான்கு வகையான எழுத்துக்களை எழுதி வந்தனர் என்பதை அறிகிறோம். சங்ககாலத்தில் வழங்கிவந்த பழந்தமிழ் எழுத்து, பிறகு வந்த பிராமி எழுத்து, பிராமியிலிருந்து உருவம் பெற்ற வட்டெழுத்து, தற்காலச் சோழர் எழுத்து என்பவை அவை. பழந்தமிழ் எழுத்துச் சுவடிகளும், பிராமி எழுத்துச் சுவடிகளும், வட்டெழுத்துச் சுவடிகளும், இக்காலத்தில் அடியோடு மறைந்துபோய்விட்டன. ஏனென்றால் ஓலைச் சுவடிகள் இரண்டு நூற்றாண்டுக்கு மேல் நிலைத்திருப்பதில்லை. ஆகவே அந்த எழுத்துச் சுவடிகள் இப்போது முழுவதும் மறைந்து விட்டன. ஆனால் வட்டெழுத்தின் வரிவடிவம் இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கிறது. மலைக் குகைகளிலும், குன்றுப் பாறைகளிலும், செப்பேடுகளிலும், எழுதப்பட்ட வட்டெழுத்துச் சாசனங்கள் அழியாமல் கிடைத்துள்ளன. வட்டெழுத்துக்கு முன்பு வழங்கிவந்த பிராமி எழுத்துக்கு முன்பு வழங்கப்பட்ட பழைய தமிழ் எழுத்தின் வரிவடிவம் இதுவரை நமக்குக் கிடைக்கவில்லை. சங்ககாலத்தில் எழுதப்பட்ட பழைய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒருவேளை அந் நடுகற்களின் பழைய தமிழ் எழுத்து வடிவத்தைக் காணக்கூடும். (இப்போது கிடைத்துள்ள நடுகற்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நடுகற்கள்.)

பிராமி எழுத்தின் கரந்துறை வாழ்க்கை.(அஞ்ஞாதவாசம்)

நம்முடைய இப்போதைய ஆய்வு பிராமி எழுத்தைப்பற்றிய தாதலால் இதைத் தொடர்ந்து ஆராய்வோம். தமிழகத்தில் வழங்கி வந்த பிராமி எழுத்து ஏறத்தாழ கி.பி. 3ஆம் நூற்றாண்டில் மறைந்துவிட்டது என்று கூறினோம். ஆனால் மலைக் குகைகளிலும், பாறைக் குன்று களிலும், அந்தக் காலத்தில் எழுதப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டு கள் அழியாமல் இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன. பதினேழு நூற்றாண்டுகள் மறைந்து கிடந்த அந்த எழுத்துக்கள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டன. 1700 ஆண்டுகள் மறைந்து கிடந்த பிராமி எழுத்துக்கள், மலைக்குகைகளிலே ஒளிந்துகிடந்த அந்த எழுத்துக்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அது வரையில் அவை