பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

33

களையும், பழக்க வழக்கங்களையும், நாகரிகங்களையும், அறியாதது தான். மற்றும், வட இந்திய (ஆரிய) தொடர்புகளை இந்தக் கல்வெட்டுக்களோடு இணைக்க வேண்டும் என்னும் கருத்துடன் இவர்கள் ஆராய்ந்தனர். இதனால் இவர்களுடைய ஆராய்ச்சிகள் பிழைபட்டுள்ளன. அவர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளி யிட்டனர். தவறு இல்லாமல் சரியாக வாசிக்கப்பட்ட வாசகங்கள் மிகச் சிலவே.

வடமொழி வெறி

தமிழ்நாட்டிலுள்ள பிராமி எழுத்துச் சல்வெட்டுக்களை ஆராய்ந்து படித்துக் பொருள் காண்பவர் நடுநிலையுள்ளவராக இருக்கவேண்டும். அந்த எழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்துப் பழக்க வழக்கம் முதலியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். விருப்பு வெறுப்பு இல்லாமல் உண்மை காணும் கருத்து உள்ளவராகவும், நேர்மையாளராகவும் இருக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெறுப்பு உணர்வு உள்ளவராக இருத்தல் கூடாது.

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை ஆராய்ந்த ஒருவர் அளவுகடந்த சமற்கிருத வெறியுள்ளவராக இருக்கிறார். அதுபற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் அவர் தமிழ்மொழிமீதும் தமிழர் மீதும் வெறுப்புள்ளவராகவும், தவறான எண்ணமுள்ளவராகவும் இருக்கிறார். அவர் அவற்றைத் தம் இடத்திலேயே வைத்துக் காண்டால் தவறு இல்லை. ஆனால் தமிழ் மொழியைப்பற்றித் தாக்கி எழுதியிருக்கிறார். ஆகவே அதை இங்கு எடுத்துக்காட்ட வேண்டி யிருக்கிறது. திரு.சி. கிருட்டிணராவ் என்பவர் வெறுப்புணர்வுடன் எழுதியுள்ளதை இங்குக் காட்டவேண்டியிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்களை முதல் முதலாகப் படித்தவர் எபிகிராபி இலாகாவில் இருந்த ராவ்சாகிப் எச். கிருட்டிண சாத்திரியும், திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யரும் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டுக்களை சமற்கிருத- பிராகிருத மொழிக் கண்ணோட்டத்தோடு படித்து அரைகுறையான கருத்துக்களைக் கூறினார்கள். இவர்கள் தங்கள் ஆராய்ச்சியில், இந்தக் கல்வெட்டுக்களில் தமிழ்ச் சொற்களும் இருக்கின்றன என்று கூறினார்கள். இவர்களுக்குப் பிறகு இந்தக் கல்வெட்டெழுத்துக்களை ஆராய்ந்த நாராயண ராவ், இவர்கள் கூறியதை முழுவதும் மறுத்துக்