பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

35

கல்வெட்டுக்களைத் தற்கால தமிழுடன் பொருத்தி உருமாற்றுவது விழிப்புணர்வு இன்றித் தவறான வழியில் செலுத்துவதாகும் என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கல்வெட்டுக்களைப் படித்த கிருட்டிண சாத்திரி, சுப்பிரமணிய அய்யர் போன்றவர்களே அதிகமாக மாறுபடுகிற போது நான் மட்டும் சரியாகப் படித்துப் பொருள் காண்பேன் என்று நான் சொல்லவில்லை. அப்படிக் கூறுவது அறியாமையாகும். இந்தக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருப்பதனாலும், ஏனைய (வடநாட்டுப்) பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருப்பதனாலும், இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப் பட்டவையே என்று கருதி இவற்றிற்குப் பொருள் காண முயல்கிறேன்.

இந்தக் கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டுள்ளன என்பதை நினைவில் வைக்க வேண்டும். இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில்தான் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இரண்டொரு எழுத்துக்கள் தவிர மற்ற எழுத்துக்கள் எல்லாம் தெளிவாகத் தெரிகின்றன. இவற்றைக் கிருட்டிண சாத்திரி திறமையாகப் படித்திருக்கிறார். இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் புதுமையாகக் காணப்படுகிற இரண்டொரு எழுத்துக்களைக் கொண்டு இந்தக் கல்வெட்டுக்கள் பிராகிருதம் அல்லாத மொழி (தமிழ்மொழி) என்று கருதுவது கூடாது. இந்தப் பிராமிக் கல்வெட்டுக்களில், ஏனைய பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் காணப்படாத எழுத்துக்கள் காணப்படுகின்றன. சில எழுத்துக்கள் வியப்பான புதிய உருவத்தைப் பெற்றுள்ளன.

இந்தக் கல்வெட்டுக்களின் வியப்பான அமைப்பு என்னவென்றால், இவை பிராகிருத மொழியைச் சேர்ந்த பைசாச மொழி என்பதே. பிராகிருத மொழி இலக்கண் ஆசிரியர் கருத்துப்படி, பாண்டி நாட்டிலே பேசப்பட்ட மொழி பைசாச மொழியாகும். அவர்களுடைய இந்தக் கருத்தை இந்தக் கல்வெட்டுக்கள் மிகப் பொருத்தமாக உறுதிப்படுத்து கின்றன.

இவ்வாறு திரு.நாராயண ராவ் தமக்குள்ள அளவு கடந்த தமிழ் வெறுப்பினையும், அளவு கடந்த சமற்கிருத வெறியையும்