பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

வெளிப்படையாகக் காட்டியுள்ளார்.” இந்தச் சமற்கிருத வெறியருடைய கோமாளித்தனமான ஆராய்ச்சியை, பிராமி எழுத்து ஆராய்ச்சியில் பிறகு பார்ப்போம்.

இந்தியாவில் வழங்கி வருகிற மொழிகளில் தமிழ்மொழி மிகப் பழைமையானது என்பதையும் அது சமற்கிருதத்தைவிடத் தொன்மையானது என்பதையும் செம்மை மனம் படைத்த அவர்கள் அறிவார்கள். வெறுப்பும், மொழிவெறியுங் கொண்ட நாராயணராவ் போன்றவர்கள் உண்மையை அறியமாட்டார்கள்.

என்ன மொழி?

தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டபோது, கல்வெட்டு ஆராய்ச்சிக்காரருக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. இலங்கையிலும், வடஇந்தியாவிலும் காணப் படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்கிறபடியால், தமிழ்நாட்டில் காணப்படுகிற பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும் பிராகிருத மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். அவ்வாறே கல்வெட்டு இலாகா ஆண்டு அறிக்கையிலும் இவை பாலி மொழியில் எழுதப் பட்டவை என்று எழுதினார்கள். ஆனால் படிக்க முயன்றபோது பிரா கிருத மொழிக்கு மாறுபாடான வாக்கியங்களும், சொற்களும் காணப் பட்டன. கடைசியில் இந்த எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளது தமிழ் மொழி என்று அறிந்தனர். ஆனால், பாலி, அர்த்தமாகதி போன்ற பிராகிருத மொழிச் சொற்களும் இக் கல்வெட்டுக்களின் இடையிடையே காணப்படுகின்றன. இந்தச் சொற்களைச் சமற்கிருத மொழிச் சொற்கள் என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் அவர்களுடைய கருத்து தவறானது. அவை சமற்கிருத மொழிச் சொற்கள் அல்ல; பிராகிருத மொழிச் சொற்கள். இந்தக் கல்வெட்டெழுத்துக்களை எழுதியவர் பௌத்த சைன சமயத்தவர். இவர்கள் பிராகிருத மொழியைப் பயின்றவர். ஆகவே இந்தக் கல்வெட்டு வாக்கியங்களில் பிராகிருத மொழிச் சொற்களைச் சேர்த்து எழுதினார்கள். சங்க காலத்திலே தமிழில் வட இந்திய மொழியான பிராகிருதச் சொற்களே முதலில் கலந்தன. ஏனென்றால், பிராகிருத மொழியைப் பயின்றவர் பௌத்த சமண சமயத்தார்களே. தமிழ்நாட்டில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழ்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.