பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

41

-

சங்கச் செய்யுட்களை எழுதினவர் பெரும்பாலும் பௌத்த-சமணர் அல்லாத சைவ-வைணவர்கள். மேலும் அவர்கள் அகப்பொருள் புறப்பொருள்களைப் பற்றி, செய்யுட்களைச் செய்தனர். காதலையும், வீரத்தையும் பற்றிப் பாடின செய்யுட்களில் துறவிகள் (சமண பௌத்தத் துறவிகள்) இடம்பெற வேண்டிய வாய்ப்பு இல்லை. ஆகவே இவற்றைப் பற்றிய செய்திகள் சங்கச் செய்யுட்களில் இடம் பெறவில்லை.

ஆனால், சங்கச் செய்யுட்களிலே காடுகளில் குகைகளில் வசித்த முனிவர்களைப் பற்றிய குறிப்புகள் குறிப்பாகக் காணப் படுகின்றன. சல்லியங்குமரனார் நற்றிணை 141ஆம் செய்யுளில் 'குன்றுறை தவசியரை'க் குறிப்பிடுகிறார்.8

காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், சமண மதத்துத் துறவிகள் மலைப்பக்கங்களில் இருந்ததைக் குறிப்பாகக் கூறுகிறார்.

கலித்தெகை மருதக்கலி 28ஆம் செய்யுள் ‘கடவுட்பாட்டு' என்று கூறப்படுகிறது. (கடவுள்-முனிவர், துறவிகள்). இந்தச் செய்யுளிலும் சமண சமயத்துத் துறவிகள் மலையில் இருந்தது குறிப்பாகக் கூறப்படுகிறது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் சமண சமயத் துறவிகள் மலைகளில் இருந்து தவஞ் செய்தனர். இதைத் திருஞான சம்பந்தர் 'ஆனைமாமலை ஆதியாய இடங்களில்' சமண சமயத் துறவிகள் இருந்ததைக் கூறுகிறார்.

பிராமிக் கல்வெட்டுக்களினால் அறியப்படுபவை

தமிழ்நாட்டுப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப் பட்டவை. இதே காலத்தில்தான் சங்கச் செய்யுட்கள் (கடைச் சங்கச் செய்யுட்கள்) பாடப்பட்டன. சங்கச் செய்யுட்கள் பெரும்பாலும் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன. அச் செய்யுட்களில் பிராகிருத மொழி வடமொழிச் சொற்களின் கலப்பு மிகச் சிலவே. ஆனால், அக் காலத்தில் வேற்றுமொழி (முக்கியமாக பிராகிருத மொழியும் சமக்கிருத மொழியும்) கலப்பு ஏற்படவில்லை என்று கருதுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. பிராகிருத மொழிச் சொற்கள் கடைச்சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்ததைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளக்குகின்றன. அச் சொற்களைக்