பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

காட்டுவோம். தம்மம் (தருமம்), ஸாலகன், நிகமம், உபாசன், விஸுவன் (ஓர் ஆளின் பெயர்) அதிட்டானம், காஞ்சணம், பணிதம், கரஸபன் (ஆளின் பெயர்) காயிபன் (ஆளின் பெயர்) குவிரன், கோயிபன் (கோசிபன்) குலஸ, ஸெட்டி முதலியன.

கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையில் கிரேக்க-உரோம நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்து வாணிகஞ் செய்த யவனர் வாயிலாக, சில கிரேக்க மொழிச் சொற்கள் சங்க காலத் தமிழில் கலந்துவிட்டதைக் காண்கிறோம். அவை, சுருங்கை, மத்திகை, கலம் (மரக்கலம்), கன்னல் முதலியன. வாணிகத்துக்காக வந்துபோன யவனரின் கிரேக்க மொழிச் சொற்கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளன என்றால், மதச் சார்பாகத் தமிழகத்துக்கு வந்து ஏறத்தாழ 500 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த பௌத்த-சமண சமயத்தவர்கள் மூலமாகப் பாலி, சூரசேனி என்னும் பிராகிருத மொழிச் சொற்கள் தமிழோடு கலக்காமல் இருக்குமோ? கி.மு. 3ஆம் நூற்றாண்டில் வந்து தமிழகத்தோடு கலந்துபோன பௌத்த சமண சமயங்களின் ‘தெய்வ’ மொழியாகிய பாலி, சூரசேனி மொழிச் சொற்கள் சமயச் சார்பாகத் தமிழரிடையே கலக்காமல் இருந்திருக்க முடியுமா? பௌத்த-சமண சமயங்களை மேற்கொண்ட தமிழர் பிராகிருத மொழிகளைக் கற்றனர். வடமொழியையும் கற்றனர். அதனால் அவர்கள் சமயநூல் எழுதினபோது அந் நூல்களில் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்து எழுதினார்கள். சீத்தலைச் சாத்தனார் தமிழை நன்கு கற்றவர். அதனோடமையாமல், பௌத்தர் என்னும் முறையில் பாலி மொழியையும் நன்கு கற்றவர். ஆகவே, அவருடைய மணிமேகலையில் தாராளமாகப் பாலி மொழிச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்தவரான இளங்கோ அடிகள் தாய்மொழியாகிய தமிழ்மொழியை நன்றாகக் கற்றவர். அதனோடு அமையாமல், சமணர் என்னும் முறையில் பிராகிருத மொழியையும் நன்கு கற்றவர். அவர் இயற்றிய சிலப்பதிகாரத்தில் பல பிராகிருத மொழிச் சொற்களும் இடம் பெற்றுள்ளன. அதே காலத்திலிருந்த சங்கப் புலவர்கள் தனித் தமிழ் கற்றவர்கள். அவர்கள் அயல்மொழிகளைக் கற்றவர் அல்லர். அவர்கள் தனித்தமிழ் மொழியில் தமிழ் மரபுப்படி அகப்புறப் பொருள் பற்றிய செய்யுட்களை இயற்றினார்கள். அதனால் அவர்களின் செய்யுட்கள் தனித் தமிழாக உள்ளன. அவர்கள் காலத்தில் வேற்றுமொழிகள் தமிழில் கலக்க வில்லை என்று கூறுவது