பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அழகர் மலைப் பிராமி எழுத்துக்கள்

மதுரையிலிருந்து பதின் மூன்று கல் தொலைவில் அழகர் மலை இருக்கிறது. இஃது இப்போது பேர்போன வைணவத் திருப்பதியாக இருக்கின்றது. சங்க காலத்தில் இந்த மலைக்குச் சோலைமலை, பழ முதிர்ச்சோலை, திருமாலிருஞ்சோலைமலை, இருக்குன்று என்று பல பெயர்கள் இருந்தன. சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் கூறப்படுகின்ற திருமால்குன்றம் என்பது இந்த மலையே. இடைக் காலத்தில் இந்த மலை இடபகிரி என்று பெயர் பெற்றிருந்தது. கடைச் சங்க காலத்தில் இந்த மலையில் கண்ணன்-பலராமன் என்னும் இரு பெருந்தெய்வங்களுக்குக் கோயில் இருந்தது. இந்தத் தெய்வங்களை இளம்பெருவழுதி (கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி) என்னும் பாண்டியன் பாடித் துதித்தார். அந்தப் பாடல் பரிபாடலில் 15ஆம் பாட்டாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. மதுரையைச் சூழ்ந்திருந்த எண்பெரும் சமணக் குன்றுகளில் அழகர் மலையும் ஒன்று. சங்க காலத்தில் இந்த மலையின் ஒரு பக்கத்தில், சமண முனிவர்கள் இருந்தனர். அவர்கள் இருந்த குகையும் அதிலுள்ள கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் 1910ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பிராமி எழுத்துக்கள் ஒன்பது தொடர் மொழிகளாக உள்ளன. இவை 1910ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 70 முதல் 79 எண் ணுள்ளவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் குகை கிடாரிப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் மலைமேல் அமைந்திருக்கிறது. இந்தக் குகையில் ஒரு பக்கத்தில் சுனை நீர் இருக்கிறது. இங்குள்ள பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

இதன் தொடர் மொழிகளை அறிஞர் சிலர் படித்துள்ளனர். அவர்கள் படித்ததையும் பொருள் கூறுவதையும் பார்ப்போம். (இதன் வரிவடிவத்தைத் திரு.ஐ. மகாதேவன் காட்டியுள்ளார்.) திரு. கிருட்டிண சாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்.'