பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

ஏது? சாதாரண பொன் கடகந்தான் ஏது? கோவலனிடம் கடகம் இருந்திருந்தால், அதை விற்காமல் கண்ணகியின் காற்சிலம்பை விற்கக் கொண்டு போவானா? சங்க காலத்தில் மங்கையரின் காற் சிலம்புக்குத் தனிப் பெருமையும் மதிப்பும் இருந்தது. மங்கையர் மணம் செய்து கொள்ளும் போது, அவர்களின் காற்சிலம்பைக் கழிக்கும் சிலம்புகழி நோன்பு சிறப்பாக நடைபெற்றது. அக்காலத்து மகளிர் காற்சிலம்பைச் சிறந்த, தனிமதிப்புள்ள பொருளாகக் கருதியிருந்தனர். ஆகவே கோவல னிடம் மணிக் கடகம் இருந்திருந்தால், அதை விற்காமல் கண்ணகியின் காற்சிலம்பை விற்பதற்கு மணந் துணிமாட்டான் கோவலன். அவனிடம் வேறு அணிகலன் இல்லாத வறுமை நிலையில், தன் மனைவியின் காற்சிலம்பை விற்பதற்குக் கொண்டு வோனான்.

எனவே, பத்தினிச் செய்யுளில், கையில் மணிக்கடகம் அணிந்து இறந்துகிடப்பதாகக் கூறுப்படுகிறவன் கோவலன் அல்லன், வேறு யாரோ போர் வீரன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது. அவ்வீரன் கடகம் அணிந்து இருக்கிறான் என்று கூறப்படுவதால், அவன் செல்வம் படைத்த சேனைத் தலைவனாக இருக்கக் கூடும் என்பதும் தெரிகிறது.

இன்னும் அகச் சான்றும், இவ்வறிஞர்கள் கொண்ட கருத்து தவறானது என்பதைக் காட்டுகிறது. இறந்து கிடக்கிற வீரன், தன் கையில் கண்டகம் (உடைவாள்) ஏந்தியிருக்கிறான் என்று இந்தப் பத்தினிச் செய்யுள் கூறுகிறது. கோவலன் கொலையுண்டபோது அவன் கையில் உடைவாள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. கோவலன் கையில் வாள் இருந்திருக்குமானால், அவன் வெட்டுண்டு மடிந்திருக்க மாட்டான். சிலப்பதிகார வரலாறு வேறுவிதமாக முடிந்திருக்கும். ஏனென்றால், கோவலன் படைக்கலப் பயிற்சியுள்ளவன் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. மதங்கொண்ட யானை பிச்சைக்காரன் ஒருவனைத் தன் கையில் பிடித்துக்கொண்டபோது கோவலன் யானையின் கையிலிருந்து அவனை விடுவித்துத் தானும் தப்பித்துக் கொண்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. (சிலம்பு-15-ஆம் காதை 43-53.) இதிலிருந்து, "களிறு அடக்கிய கருணை மறவ" னாகிய கோவலன் யானைப் போர்ப் பழகியவன் என்பது தெரிகிறது. யானைப் போர் பழகியவன் சாதாரண வாட்போரிலும் பழகியிருப்பானன்றோ?