பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

அய்யங்காரும், சாஸ்தியாரும், பிள்ளையும், இச்செய்யுள் கோவலன் கண்ணகியரைப்பற்றியது என்று கூறினர். இவர்கள் இவ்வாறு கூறியதற்குக் காரணம் என்னவென்றால், யாப்பருங்கல உரையாசிரியர் இதனைப் பத்தினிச் செய்யுள் என்று கூறியதுதான். உரையாசிரியரின் மேல் தவறில்லை. பத்தினி என்றால் கண்ணகிதான் என்று கருதிக் கொண்டது இவர்கள் த்வறு. பத்தினி என்றால் பொருள் என்ன? பத்தினி என்றால் கற்புடைய பெண் என்பது பொருள். எனவே பத்தினிப் பெண்கள் - கற்புடைய பெண்கள் - பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு பத்தினிப் பெண்ணைப்பற்றிய செய்யுள் இது. பத்தினி என்றால் கண்ணகி, பத்தினிச் செய்யுள் என்றால் கண்ணகியைப்பற்றிய செய்யுள் என்று ஏன் கருத வேண்டும்? செய்யுளில் கூறப்படுகிறதைப் பார்த்தாலே, இது கண்ணகி கோவலரைப்பற்றிய செய்தியல்ல என்பது நன்கு தெரிகிறதே. விழிப்பாக இருந்து, இச்செய்யுளின் பொருளைக் கவனித்து, அகச் சான்று புறச்சான்றுகளைக்கொண்டு ஆராய்ந்து பார்த்திருந்தால் இவர்கள் இத்தவறான கருத்தைக் கொண்டிருக்க மாட்டார்கள்.

பத்தினி என்பதன் பொருள் என்ன என்பதைச் சிந்திக்காமல் அகச்சான்று புறச்சான்றுகளைக் கருதாமல், பத்தினி என்றால் கண்ணகி ஒருவர்தான் என்று தவறான கருத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தபடியினாலே, இவர்களின் முடிவு தவறாயிற்று. தவறான ஆராய்ச்சியினால் பெற்ற தவறான முடிவை வைத்துக்கொண்டு. அதன் மேலே யூகமான கருத்துக்களை இவர்கள் கற்பித்துக் கொண்டார்கள். பத்தினிச்செய்யுள், கண்ணகியின் வரலாற்றைக் கூறுகிற செய்தி என்றும், அது கண்ணகியார் பாடிய செய்யுள் என்றும் இவர்கள் கூறுவது மருட்சியே யல்லாமல் தெருட்சியல்ல. இது கண்ணகி கோவரைப் ற்றிய செய்யுளாக இருந்தால், இச்செய்யுளை இளங்கோ அடிகள் தமது சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பார் அன்றோ? உரையாசிரியர்களாகிய அடியார்க்கு நல்லாரும் அரும்பத உரையாசிரியரும் தமது உரைகளில் மேற்கோள் காட்டியிருப்பார்கள் அல்லவா? வேறு யாரோ ஒரு பத்தினிப் பெண்ணைப்பற்றிய செய்யுள் ஆகையினாலே, இச் செய்யுளை அவர்கள் தமது உரையில் மேற்கோள் காட்டவில்லை. சிலப் பதிகார வரலாற்றுக்கும் இப்பத்தினிச் செய்யுளுக்கும் உண்மையில் யாதொரு தொடர்பும் இல்லை. யாரோ ஒரு பத்தினிப் பெண், போர்க் களத்தில் இறந்துபோன தன் கணவனைப் பற்றிப் பாடிய செய்யுள் இப்பத்தினிச் செய்யுள் என்பது தெளிவாகக் தெரிகிறது.

"