பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

139

இதில், திருமாவுண்ணி என்னும் பெண் மணி வேங்கை மரத்தின் மேல் பரண் கட்டிக்கொண்டு அதில் இருந்தாள் என்பதும், அங்கு ஒருவனால் ஏற்பட்ட கவலையினால் ஒரு முலையை அறுத்துக் கொண்டாள் என்பது கூறப்படுகின்றன.

சிலப்பதிகாரம் கூறுகிற கண்ணகி மதுரை நகரத்தை எரித்தபிறகு சேர நாட்டுக்குப் போகிற வழியிலே ஒரு வேங்கை மரத்தின் நிழலிலே தங்கினார் என்றும், மதுரையை எரிக்குமுன் தமது ஒரு கொங்கையை அறுத்து எறிந்தார் என்றும் கூறப்படுகிறார்.

வேங்கை மரத்தண்டை நின்றது, ஒரு கொங்கையை அறுத்தது என்னும் ஒப்புமையைக்கொண்டு சிலப்பதிகாரக் கண்ணகியாரும் நற்றிணைச் செய்யுள் கூறுகிற திருமாவுண்ணியும் ஒருவரே என்றும், இவ்விரண்டும் ஒரே செய்தியைத்தான் கூறுகின்றன என்றும் சிலர் கருதுகிறார்கள்.

திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருவரே என்னும் கருத்தை முதன்முதலில் கூறியவர், நற்றிணையை முதன்முதலில் அச்சிட்ட பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்கள். இவர், நற்றிணைச் செய்யுட்களுக்குத் தாமே புதிய உரை எழுதியுள்ளார். திருமாவுண்ணி யின் வரலாற்றைக் கூறுகிற செய்யுளின் உரையிலே நாராயணசாமி அய்யர், “திருமாவுண்ணி என்பது கண்ணகியைக் குறிக்கிறது. போலும் என்று ஒரு குறிப்பு எழுதினார். மேலும், அந்நூலின் பாடினோர் வரலாறு என்னும் பகுதியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார்: "மதுரை மருதளிளநாகனார் ஒரு கொங்கை யறுத்த திருமாவுண்ணி என்பாள் கதையைச் சுருக்கிக் கூறுகிறார்; அது கண்ணகி கதைபோலு மென்று கருதற் கிடனாகிறது; செவ்வையாக விளங்கவில்லை. இவ்வாறு, நாராயண சாமி அய்யரவர்கள், திருமாவுண்ணியின் கதை கண்ணகி கதைபோலக் காணப்படுகிறதோ என்று ஐயங் கொண்டார்.

இவருக்குப் பிறகு திரு. மு. இராகவ அய்யங்கார் அவர்கள், “பத்தினி தேவியைப் பற்றிய சில குறிப்புகள்” என்னும் தலைப்புள்ள கட்டுரை ஒன்றைக் கா.நமசிவாய முதலியார் நினைவு மலரில் எழுதினார். பின்னர் அக்கட்டுரையைத் தமது “ஆராய்ச்சித் தொகுதி" என்னும் நூலில் வெளியிட்டார். அக்கட்டுரையிலே, நற்றிணைச் செய்யுள் கூறுகிற ஒரு முலையறுத்த திருமாவுண்ணியும், சிலப்பதி காரம் கூறுகிற ஒரு முலை யறுத்த கண்ணகியாரும் ஒருவரே என்று