பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

பிறகு, பழைய அரும்பத உரை யாசிரியர் கூறியதை மறுக்கவும் செய்கிறார். அது திருச்செங்கோடு என்பராலெனின், அவர் அறியார் என்று கூறிக் காரணத்தையும் சொல்லுகிறார். இவர் கூறுகிற காரணமாவது என்னை? அத்திருச்செங்கோடு வஞ்சிநகர்க்கு கொடுங்கோளூர்க்கு) வடகீழ்த்திசைக் கண்ணதாய் அறுபதின்காத ஆறு உண்டாகலானும் அரசனும் உரிமையும் (செங்குட்டுவனும் அவனுடைய அரசியும்) மலை காண்குவமென்று வந்து, கண்ட அன்றே வஞ்சி புகுதலானும் அது கூடாமையினென்க" (சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லார் உரை.)

கண்ணகியார் உயிர்விட்ட இடம் நெடுவேள் குன்று என்று கூறிய இளங்கோ அடிகள் செங்குன்று எங்கிருக்கிறது என்று கூறவில்லை. நெடுவேள் குன்றம், கொங்கு நாட்டிலுள்ள திருச்செங்கோடு மலை என்பது பழைய அரும்பத உரையாசிரியர் கருத்து. அஃதன்று, அது சேரநாட்டில் கடற்கரைக்கு அருகிலிருந்த, கொடுங்கோளூர்க்குப் பக்கத்திலிருந்த செங்குன்று என்பது அடியார்க்கு நல்லாரின் கருத்து. அஃதாவது, மதுரையிலிருந்து பதினான்கு நாள்கள் வழிநடந்த கண்ணகியார் கொங்கு நாட்டுத் திருச்செங்கோடு மலைக்கு வந்து அங்கு உயிர் நீத்தார் என்று அரும்பதவுரை யாசிரியரும், சேர நாட்டுக் கொடுங்கோளூர்க்கு (வஞ்சிக் கருவூருக்குப் பக்கத்தில் செங்குன்று என்னும் குன்றுக்கு வந்து உயிர் நீத்தார் என்று அடியார்க்கு நல்லாரும் மாறுபடக் கூறுகிறார்கள்.

கோவிந்தராசனார் கருத்து

பேராசிரியர் சி. கோவிந்தராசனார் இதுபற்றி ஆராய்ந்து, பாண்டி நாட்டில் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள சுருளிமலை என்னும் குன்றுதான் நெடுவேள் குன்று என்றும் அங்குதான் கண்ணகியார் உயிர்விட்டார் என்றும் அந்த இடத்தில் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்தான் என்றும் கூறுகிறார். நெடுவேள் குன்று என்னும் பெயர் பிற்காலத்தில் சுருளிமலை என்று மாறிவிட்டது என்றும் கூறுகிறார். 'இதுதான் சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை என்னும் தலைப்பில் ஆனந்த விகடனில் (27-2-1972) இவர் இதுபற்றி நீண்ட தோர் கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த நீண்ட கட்டுரையின் கருத்தைச் சுருக்கமாக இங்குத் தொகுத்துக் கூறுவோம்:-