பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பிய “ஆராய்ச்சிக்”காரர்கள்*

தொல்காப்பியத்தைப் பற்றியும் தொல்காப்பியரைப் பற்றியும் சிலர் ஆராய்ந்து எழுதியுள்ளனர். இவர்களில் சிலர், தொல்காப்பியம் பிற்காலத்து நூல், அதாவது கி.பி. 400-க்குப் பிறகு எழுதப்பட்ட நூல் என்றும், தொல்காப்பியத்தில் கூறப்படும் கருத்துக்கள் சில வடமொழி நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும், கற்பு முறையைத் தமிழர் களுக்குக் கற்பித்தவர் ஆரியப் பார்ப்பனர் என்றும் இந்த “ஆராய்ச்சிக்’ காரர்கள் எழுதியுள்ளனர். யானைகண்ட பிறவிக் குருடர்கள், யானை முறம் போல இருக்கிறது என்றும், யானை உரல் போல இருக்கிற தென்றும், யானை உலக்கைபோல இருக்கிறதென்றும், யானை துடைப்பம் போல இருக்கிறதென்றும் கூறினதுபோல, இந்த “ஆராய்ச்சிக் குருடர்களும் உண்மையறியாமல் தங்கள் மனம் போல எழுதி யுள்ளனர். இவர்கள் கூறுவதற்குத் தக்க விடை கூறி உண்மையை நிலை நாட்டவேண்டுவது கற்றறிந்தவரின் கடமை அல்லவா? முதலில் இந்த “ஆராய்ச்சிக் காரர்கள் தொல்காப்பியத்தைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்போம்.

கே.ஜி. சங்கர் என்பவர் 1924இல் “சங்கநூல்களில் மௌரியர்” என்னும் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையில் இவர் கூறும் கருத்தின் சுருக்கம்:

66

"அகநானூறு 251 ஆம் செய்யுளில், தமிழ்நாட்டு மோகூர் மன்னனுக்கு எதிராகப் போர்செய்ய வந்த கோசருக்கு உதவியாக மௌரியர் வந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த மௌரியர் அல்லது மோரியர் என்பவர். கி.மு. 324 முதல் கி.மு.187 வரையில் மகதநாட்டை அரசாண்ட பழைய மௌரியர் அல்லர்; கொங்கண நாட்டை அரசாண்ட “திரை கூடகர்” என்னும் அரசர் காலத்திற்குப் பிறகு அரசாண்ட மௌரியர் ஆவர். இவர்கள் கி.பி. 6,7,8 -ஆம் நூற்றாண்டுகளில் கொங்கண நாட்டை அரசாண்டார்கள். இந்த மௌரியர் கொங்கண நாட்டுக்குக் கி.பி. 494 இல் வந்தார்கள். ஆகவே, மௌரியரைக் கூறுகிற இந்தச் சங்கச் செய்யுள் கி.பி. 500க்குப் பிறகு எழுதப்பட்டதாதல் வேண்டும். ஆகவே சங்க நூல்களும் கி.பி. 500 க்கு பிறகு எழுதப்பட்டவை. * செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு.36. 1961-62.