பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

وو

இந்த எட்டு மலைகளில் சமண முனிவர் இருந்தனர் என்பதைப் பெரியபுராணம், "எண்பெருங் குன்றத்து எண்ணாயிரஞ் சமணர்,' என்று கூறுகிறது.

யானைமலை என்பது, யானை படுத்திருப்பதுபோல அமைந்த மலை. நாகமலை என்பது நாகப்பாம்பு படுத்திருப்பதுபோன்ற மலை. இயற்கையாக யானையும் நாகப்பாம்பும் போன்று அமைந்துள்ள இந்த மலைகளைப் பற்றி இடைக்காலத்திலே சில கதைகள் கற்பிக்கப்பட்டன. சமணர் தமது மந்திர சக்தியினாலே யானையை மலைப்பாம்பு விழுங்குவதுபோலக் காட்டிப் பாண்டிய அரசனை வசப்படுத்தினார்கள் என்பது ஒரு கதை. இந்தக் கதையைத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் தமது உரையில் குறிப்பிடுகிறார். இந்தக் கதை சமணர் மந்திர சக்தியுடையவர் என்பதைக் காட்டக் கற்பிக்கப்பட்டது போலும். ஞானசம்பந்தர் காலத்தில் இந்தக் கதை கற்பிக்கப்படவில்லை. அவர் காலத்தில் இக்கதை வழங்கியிருந்தால் இதனைத் தமது தேவாரத்தில் கூறியிருப்பார். அவர் காலத்தில் இக்கதை வழங்காதபடியால், சமணர்கள் வசித்த யானைமலை முதலிய மலைகள் என்று மட்டும் கூறினார்.

இன்னும் பிற்காலத்தில் யானையைப் பாம்பு விழுங்கிய கதை வேறு விதமாகக் கற்பிக்கப்பட்டது. சமணர் தமது மந்திர சக்தியினால் யானையை யுண்டாக்கி, அதனை மதுரையை யழிக்கும்படி விட்டனர் என்றும் அதனைச் சிவபெருமான் நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், பிறகு மலைப்பாம்பை யுண்டாக்கி அனுப்ப அதனையும் அவர் அம்பு எய்து கொன்றார் என்றும், அவ்வாறு கொல்லப்பட்ட யானையும் பாம்பும் மலையாக அமைந்து யானைமலை நாகமலை எனப் பெயர்பெற்றன என்றும் பிற்காலத்தில் கதைகள் கற்பிக்கப் பட்டடன. இக்கதைகளைத் திருவிளையாடற் புராணத்தில் காணலாம்.

ஞானசம்பந்தர் காலத்துக்குச் சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு யானைமலையிலிருந்த குகையில் வைணவர் நரசிங்கப் பெருமாளை அமைத்தனர் என்னும் செய்தி அங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது. யானைமலை முதலிய எண்பெருங் குன்றுகளைப் பற்றி இந் நூலாசிரியர் எழுதியுள்ள சமணமும் தமிழும் என்னும் நூலில் காணலாம்.