பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இவ்வாறு இவர் இரண்டு புதிய கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். 1. சோழன் கரிகாலன் காலத்துக்குப் பிறகு, வேங்கடமலை சோழரின் வடக்கு எல்லையாக அமைந்த பிறகு, தொல்காப்பியம் எழுதப்பட்டது. 2. தொல்காப்பியம், புறநானூறு பாடல்கள் பாடப்பட்ட காலத்துக்குப் பின்னர் எழுதப்பட்டது.

இவற்றைப் பற்றி இங்கு ஆராய்வோம். முதலில் வேங்கட எல்லையைப் பற்றிப் பார்ப்போம்.

அரசியல் எல்லை (இராசங்க எல்லை) க்கும் மொழி எல்லைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இலக்கண ஆசிரியர்கள் தாம் எந்த மொழிக்கு இலக்கணம் எழுதுகிறார்களோ அந்த மொழி வழங்குகிற எல்லையை மட்டும் கருதுவார்களேயல்லாமல், அரசியல் எல்லை களைக் கருதமாட்டார்கள். இந்த உண்மைப்படித்தான் தொல்காப்பியப் பாயிரச் செய்யுள் தமிழகத்தின் (தமிழ் மக்கள் வாழ்ந்த இடத்தின்) எல்லையைக் கூறுகிறதே தவிர அரசர்களின் இராச்சியப் பரப்பு எல்லையைக் கூறவில்லை. இதையறியாமல் சிவராசபிள்ளை, கரிகாற் சோழன் வேங்கடமலையை எல்லையாகக்கொண்ட பிறகுதான் தமிழக வட எல்லை வேங்கடமாக அமைந்தது என்று கூறுவது தவறானது. அருவா, அருவாவடதலை நாடுகளைத் (தொண்டை மண்டலத்தைச்) சோழன் கரிகாலன் கொள்வதற்கு முன்பு அந்நாடுகள் தமிழ் நாடாக இருக்க வில்லை என்று இவர் கருதுகிறாரா? அப்படியானால், அங்குத் தமிழைத் தவிர வேறு என் மொழி வழங்கியது என்று இவர் கருதுகிறார்? தொன்று தொட்டு அருவா, அருவா வடதலை நாடுகள் தமிழகத்தைச் சேர்ந்தவை யாகவே இருந்து வந்தன. வடுகர் (தெலுங்கரும், கன்னடரும்) தமிழரை (அரவர், அருவர்) அதாவது அருவா நாட்டார் என்றும் தமிழ் மொழியை அரவ பாஷை (அருவா நாட்டார் பாஷை) என்றும் தொன்றுதொட்டு இன்று வரையும் கூறிவருகின்ற வழக்காறு, அருவா, அருவா வடதலை நாடுகள் தமிழகத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வந்தன என்பதை அங்கை நெல்லிக் கனிபோல் விளக்குகின்றன.

வேங்கடமலை ஆதிகாலம் முதல் தமிழகத்தின் வட எல்லை யாகவே இருந்து வந்திருக்கிறது. கரிகாற் சோழனுக்குப் பிறகுதான் அது தமிழகத்தின் வட எல்லையாக அமைந்தது என்று கூறுவது சற்றும் ஆதாரம் அற்ற கூற்றாகும். அரசாங்க எல்லைக்கும் மொழி எல்லைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.