பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

349

யுடையவர் என்பது பொருள். இராசபுதன தேசத்தில் பரோடா சமத் தானத்துத் தபோய் தாலுகாவைச் சேர்ந்த கார்வான் என்னும் ஊரில் லகுலீ பிறந்தார். இந்தக் கார்வான் நகரத்தின் பழைய பெயர் காயா ரோஹணம் என்பது. இந்தக் காயாரோஹணம் என்னும் பெயர் காரோ கணம் என்றாகிப் பிறகு காரோணம் என்றாகி இப்போது கார்வான் என்று வழங்கப்படுகிறது. இங்குப் பிறந்த லகுலீசர் பாசுபத மதத்தை உண்டாக்கினார். இவருக்குக் கௌசிகர் (குசிகர்), கர்க்கர் (கார்க்கியர்), மித்ரர் (மித்ரகர்), கௌருஷ்யர் (ருஷ்டர்) எனநான்குபேர் சீடர்கள் இருந்தார்கள்.

இவர்களுக்குப் பாசுபத சாத்திர பஞ்சார்த்த தர்சனம் என்றும் ஒரு நூல் இருந்தது. அது ஐந்து அத்தியாயங்களைக் கொண்டிருந்தபடியால் பஞ்சத்யாயீ என்றும் அதற்குப் பெயர் உண்டு. அன்றியும் பாசர்வஜ்ஞர் (பாவ சர்வஜ்ஞர்) என்பவர் இயற்றிய கணகாரிகை என்னும் ஒரு நூலும் உண்டு. இதற்கு ஒரு டீகை (உரை)யும் உண்டு.1 லகுலீசருக்கு இராஜபுதனத்தில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன.

லகுலீ பாசுபதம் வடநாட்டில் உண்டான சமயம் என்பதற்குச் சான்றாக, சிறுத்தொண்டரிடம் வந்த பைரவர் தம்மை வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறுவதிலிருந்தும் அறியலாம் பைரவர் சிறுத்தொண் டரைப் பார்த்து, “நிகழும் தவத்தீர்; உமைக் காணும்படியால் வந்தோம், உத்தராபதியோம்” என்று கூறியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. இப்போதும் செங்காட்டங்குடி கணபதேச்சரத்தில் உத்தராபதியா ராகிய வடக்குநாதருக்குக் கோயில் உண்டு.

இரண்டாம் புலிகேசியின் மருமகனான நாகவர்த்தனன் இகத் புரியின் அருகில் ஓர் ஊரைத் தானம் செய்து அதனால் கபாலீசுவரரை வழிபடவும், காபாலிகரை ஆதரிக்கவும் செய்தான் என்று சாசனத்தினால் தெரிகிறது. வட இந்தியாவுக்குச் சென்று புலிகேசியின் வாதாபி நகரத்தை வென்ற சிறுத்தொண்ட நாயனார் (பரஞ்சோதியார்) வட இந்தியாவிலிருந்த காபாலிகருடனும் பைரவருடனும் தொடர்பு கொண்டிருக்கக்கூடும். அதனால்தான், பிற்காலத்தில் கணபதீச்சரத் துக்கு வந்து சிறுத்தொண்டரைக் கண்ட பைரவர், தம்மை “உத்தராபதி யோம்” (வடக்கிலிருந்து வந்தவர்) என்று அவரிடம் கூறினார் போலும்.

1. இந்த நூல் 1920 இல் பரோடா சமஸ்தானத்து மத்திய புத்தக சாலையின் தலைவர் C.D. தலால் என்பவரால் அச்சிடப்பட்டுள்ளது.