பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

355

பட்டனர். இந்த ஒற்றுமை அவர்கள் காலத்திற்கு முன்பே நெடுங் காலமாக இருந்து வந்தது. பக்தியியக்கம் தோன்றி வளர்ந்த காலத்தில், நாயன்மார்கள் சிவபெருமானையும் ஆழ்வார்கள் திருமாலையும் சிறப்பாக வழிபடலாயினர். பக்தியில் ஆழ்ந்து போன நிலையில் ஆழ்வார்கள் சிவபெருமானையும் நாயன்மார்கள் திருமாலையும் சற்றுத் தாழ்த்தித் தம் பாசுரங்களில் பாடிய போதிலும், சிவபெருமானை யும் திருமாலையும் ஒன்றுபடுத்தியும் கூறினர். அதாவது இருவரையும் ஒன்று சேர்த்தும், வேறு பிரித்தும் இரண்டு வகையாகக் கூறினார்கள்.

அக்கால நிலையும் இருவரும் ஒத்துப்போகவேண்டிய ய தாயிருந்தது. எப்படி யென்றால், சமணரும் பௌத்தரும் நாட்டில் சிறப்பும் ஆதிக்கமும் பெற்றுச் சைவ வைணவ மதத்தைக் குன்றச் செய்து விட்டனர். இந்த நிலையில், பௌத்த சமணருடன் போராட வேண்டிய நேரத்தில், இவர்கள் தங்களுக்குள் வேற்றுமையையும் பிளவையும் ஏற்படுத்திக் கொண்டால், இவர்களுடைய குறிக்கோள் நிறைவேறாது. ஆகவே, சைவ வைணவ வேற்றுமையை அவர்கள் உண்டாக்கவில்லை. ஆனால் பிரிவுபடுத்திக் கூறாமலும் விடவில்லை. நாயன்மார்கள் ஆழ்வார்கள் திருப்பாசுரங்களை முழுவதும் படித்தால் அப்பாசுரங்களில் சிவன் திருமால்களைப்பற்றி ஒற்றுமையும் வேற்றுமையும் விரவியிருப்பதைக் காண்கிறோம்.

பக்தி இயக்கத்தின் மூலமாக ஆழ்வார்களும் நாயன்மார்களும் பௌத்த சமண சமயங்களை ஒருவாறு அடக்கிய பிறகு, பௌத்தமும் சமணமும் சற்று வலிவு குன்றிய பின்னர், ஏறக்குறைய கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சைவமும் வைணவமும் வெளிப்படையாக வேறு வேறு மதங்களாகப் பிரிந்துவிட்டன. பிரிந்து, சைவ சித்தாந்தம் என்றும், விசிஷ்டாத்வைதம் என்றும் தனித்தனி சமயநூல்களை ஏற்படுத்திக்கொண்டு, திரிபுண்டரம் ஊர்த்துவபுண்டரம் முதலிய வேறுபாடுகளையும் வளர்த்துக் கொண்டு, ஒன்றை யொன்று தாக்கிச் சண்டை சச்சரவுகள் செய்துகொண்டன. ஆனால், திருநாவுக்கரசர் காலத்தில் சைவம் வைணவம் என்னும் சமயப்பிரிவு வெளிப்படையாக ஏற்படாமல் இரண்டு கடவுளரும் ஒருவராகவே கருதப்பட்டனர் என்பது அவருடைய திருப்பாடல்களினால் தெரிகிறது.