பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

என்பதும் தெரிகின்றன. பல்லவ அரசர்களில் இவ்விதச் சிறப்புகளைக் கொண்டவன் யார் என்று பார்த்தால், மூன்றாம் நந்திவர்மனே இத்தகைய சிறப்புகளைக் கொண்டிருந்தான் என்பது தெரிகிறது. மூன்றாம் நந்திவர்மனுக்குத் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் எனப் பெயர் உண்டென்பதை அறிவோம்.

1

இவனைப் பாடிய நந்திக் கலம்பகம் இவனை, குறைகழல் வீரநந்தி என்றும், அறைகழல் ழடித்த அவனிநாரணன் என்றும் கூறுகிறது. மேலும், பல்லவர் கோளரி என்றும் கூறுகிறது.2 கோளரி = சிங்கம். காலில் வீரக்கழலை அணிந்த சிங்கன் என்பது இவற்றின் கருத்தாகும். அவனிநாரணன் என்னும் சிறப்புப் பெயரும் இவனுக்கு உண்டு என்பதை நந்திக் கலம்பகம் கூறுகிறது. சுந்தரர் “கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்" என்று கூறியது “அவனி நாரணன் என்னும் பெயரின் பொருளாகும்”.

கழற்சிங்கன் என்றால், காலில் வீரக்கழலை யணிந்து சிங்கம் போலப் போரை வென்றவன் என்பது பொருள். இது தெள்ளாறெறிந்த நந்திவர்மனுடைய சிறப்புப் பெயர்களில் ஒன்று.

போர் வீரர்கள் தமது காலில் வீரக் கழல்களை அணிவது வழக்கம் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. நந்திவர்மன் பல போர்களை வென்றவன். முககியமாகத் தெள்ளாற்றுப் போர் புகழ்வாய்ந்தது. இதனாலே அவன் தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என்று புகழப்பட்டான். மேலும் பாழையாறு, வெள்ளாறு, நல்லாறு, குறுகோடு முதலிய வேறு பல இடங்களிலும் போர் செய்து வென்றான் என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது. இத்தனைப் போர்களை வென்ற வீரன், காலில் கழல் அணிந்து சிங்கன் என்னும் சிறப்புப் பெயர் பெற்று கழற்சிங்கன் என்று அழைக்கப்பெற்றதில் வியப்பு இல்லை. கழற்சிங்கன் என்னும் சிறப்புப் பெயரையே சுந்தரரும் சேக்கிழாரும் தமது நூல்களில் கூறினார்கள்.

கழற்சிங்கனாகிய நந்திவர்மன், வடபுலங்களையும் கவர்ந்து கொண்டான் என்று சேக்கிழார் கூறுவதைப் போலவே, நந்திக் கலம்பகம் குறுகோடு என்னும் கோட்டையை வென்றான் என்று கூறுகிறது. குறுகோடு என்பது பல்லாரி மாவட்டம் பல்லாரி தாலூகாவில் உள்ளது.

1. செய்யுள் 28, 66.

2. செய்யுள் 59.