பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அவையடக்கச் செய்யுட்கள்*

பழங்காலத்துப் புலவர்கள் தாங்கள் இயற்றிய நூல்களிலே அவை யடக்கம் கூறியுள்ளனர். பழங்காலத்துப் புலவர்கள் புதிதாக நூல்களை எழுதுவார்களானால், அந்நூல்களைப் புலவர் அரங்கத்தில் படித்துக காட்டிப் புலவர்களின் நன்மதிப்பைப் பெறவேண்டியது அக்காலத்து வழக்கம். அதற்கு நூல் அரங்கேற்றம் என்பது பெயர். அரங்கேற்றம் செய்யப்படாத நூல்களை அக்காலத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வ தில்லை.

அரங்கேற்ற அவையிலே நூலாசிரியர் தாம் எழுதிய நூலைப் படித்துக் காட்டுவார். அந்நூலில் ஏதேனுங் குற்றங் குறைகள் இருக்குமானால் அவையிலுள்ள புலவர்கள் அக்குற்றங் குறைகளை எடுத்துக் காட்டுவார்கள். அவைப்புலவர் கூறுகிற குற்றங்களுக்கு நூலாசிரியர் தகுந்த விடை கூறி அவர்களுடைய ஐயங்களைப் போக்கவேண்டும். அரங்கேற்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட பிறகுதான் அந்நூல் உலகத்தில் உலாவத் தொடங்கும். நூலை அரங்கேற்றும்போது நூலாசிரியர் அவையடக்கம் கூறுவது மரபு: அதனால்தான் பழைய நூல்களிலே அவையடக்கச் செய்யுட்கள் காணப்படுகின்றன.

இந்தக் காலத்தில் நூலாசிரியர்கள் தங்களுடைய நூல்களை அரங் கேற்றுவதில்லை. ஆகவே அவையடக்கங் கூறுவது இல்லை. அரங் கேற்றத்துக்கு மாறாக நூல் மதிப்புரை எழுதும் வழக்கம் இப்போது இருந்துவருகிறது.

திருத்தக்க தேவர், தோலாமொழித்தேவர், கம்பர், சேக்கிழார். புத்த மித்திரனார், புகழேந்திப்புலவர், அமிதசாகரர், குணவீரபண்டிதர், கச்சி யப்ப முனிவர். புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் முதலான பெரும் புலவர்களும் தத்தம் நூல்களிலே அவையடக்கங் கூறியுள்ளனர். அவர் கூறியுள்ள அவையடக்கச் செய்யுட்களையெல்லாம் ஒன்றாகத் தொகுத்துப் படிப்போமானால் அவை ஒரு தனி இலக்கியமாக அமைந்து இன்பந்த துருவதைக் காணலாம். இங்குப் பழங்காலத்துப் புலவர் சிலருடைய அவையடக்கச் செய்யுட்களைக் காட்டுவோம்.

  • மன்னர் துரைசிங்கம் நினைவுக் கல்லூரி, வெள்ளி விழா மலர், (1973).