பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

49

இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் பாரதியாரவர்கள் கூறும் பொருளே சாலச் சிறந்தது. ஓரை என்பதற்கு 'விளையாட்டு’ என்னும் பொருளே அமைதியுடைத்து. எனவே, பிற்காலத்து உரையாசிரியர் கூறும் பிற்காலத்துப் பொருளாகிய இராசி அல்லது முகூர்த்தம் என்பது ஏற்கத்தக்கதன்று.

‘மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை'

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வரும் ஓரை என்னுஞ் சொல்லுக்கு முகூர்த்தம் அல்லது இராசி என்பது பொருள் அல்ல என்பதும், திரு. எஸ். சோமசுந்தர பாரதியார் கூறுகிற 'விளையாட்டு' என்னும் பொருளே பொருத்தமானது என்பதும் தெற்றென விளங்குகின்றன. இச் சொல்லுக்கு மிகப் பிற்காலத்தில் முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருள் ஏற்பட்ட தென்பதும், அந்தப் பிற்காலத்துப் பொருளைப் பிற்காலத்து உரை ஆசிரியர் அதனுடன் பொருத்திக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்பதும் தெரிகின்றன. ஆகவே, ஓரை என்னுஞ் சொல்லைக் கிரேக்க (யவன) மொழிச்சொல் என்று கொள்வது முடியாது.

ஓரை என்பது முகுர்த்தம் அல்லது இராசி என்னும் பொருளுள்ள அயல் மொழிச் சொல்லாக இருந்தால், அப்பொருளில் இச்சொல் இச்சூத்திரத்தில் வழங்கப்பட்டு இருக்குமானால் இச்சொல் கிரேக்க மொழியிலிருந்து வராமல் பாபிலோனிய மொழியிலிருந்து தமிழில் வந்திருக்க வேண்டும். இதற்குக் காரணங்களை மேலே கூறினோம்.

எனவே, ஐயப்பாடுள்ள ஓரை என்னுஞ் சொல்லை ஆதாரமாகக் கொண்டு தொல்காப்பியர் காலத்தை ஆராய்வது தவறாகும். அப்படி ஆராய்ந்தால், வழுக்கு நிலத்தில் நடப்பவர் சறுக்கி விழுவது திண்ண மாதல் போல, பிழையான முடிவையேயடையப் பெறுவர். ஆகவே, வையாபுரியாரும்; சிவராசபிள்ளையும் ஓரை என்னும் சொல்லைக் கொண்டு தொல்காப்பியர் காலத்தை ஆராய்ந்த முடிவு தவறுடைத்தாகும்.