பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

55

தினராக இருந்திருந்தால், அவர் சகரத்தை முதலாகவுடைய சொற்கள் தமிழில் வழங்கா என்று இலக்கணம் எழுதியிருப்பாரா?

பாண்டியரின் தமிழ்ச் சங்கத்துக்கும் சங்கம் என்று பெயர் இருக்கிறதே என்று சிலர் கேட்கக்கூடும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்துக்கு ஆதியில் ஏற்பட்ட பெயர் தமிழ்க் கழகம் என்பது. தமிழ்ச் சங்கம் என்னும் வழக்கு பிற்காலத்தில் ஏற்பட்டது என அறிக.

சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனம் பாண்டியன் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிக் கூறுகிறதென்றும், அத்தமிழ்சங்கம் வச்சிரநந்தி மதுரையில் நிறுவிய தமிழ்ச் சங்கமாக இருக்கக்கூடும் என்றும் வையாபுரிபிள்ளை எழுதுகிறார். இதுவும் வாசகரை மயக்குகிற ஒரு செய்தியாகும். சின்னமனூர்ச் சிறிய செப்பேட்டுச் சாசனத்தின் வாசகம் இது. "மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்பது.

இந்தச் சாசனத்தில் மதுரையில் சங்கம் வைத்ததும் பாரதத்தை தமிழில் எழுதுவித்ததும் பாண்டிய மன்னர் செய்ததாகக் கூறுகிறதே யல்லாமல் வச்சிரந்தி செய்த தாகக் கூறவில்லை. இவ்வாறு ஒன்றை வேறொன்றாகத் திரித்துக் கூறுவதும் மயங்கக் கூறுவதும் உண்மை யாகாது; ஆராய்ச்சியும் ஆகாது.

வச்சிரநந்தி ஆசாரியர் அமைத்த திராவிட சங்கமும் பாண்டிய மன்னர் அமைத்த தமிழ்ச் சங்கமும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு காரணம் பற்றி அமைக்கப்பட்ட சங்கங்கள் என்றும் இரண்டுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்றும் திரு. பி.தி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் எழுதியதை முன்னமே காட்டினேன். திரு எம்.எஸ். இராமசாமி அய்யங்கார் அவர்கள் தாம் ஆங்கிலத்தில் எழுதிய ‘தென்இந்திய ஜைன சமய ஆய்வுரைகள்' என்னும் நூலிலேயும் வச்சிரநந்தியின் சங்கத்தைப் பற்றிக் கூறுகிறார்.

'தென்னாட்டில் குடியேறிய திகம்பர ஜைன முனிவர்கள் தங்களுடைய ஜைன சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு இந்தச் சங்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை அறிகிறோம்' என்று அவர் எழுதுகிறார்.8

8.

P. 52 Studies in South Indian Jainism. M.S. Ramasamy Aiyengar, Madras 1922.