பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மதுரைக் காஞ்சியின் காலம்*

பத்துப்பாட்டு என்னும் தொகைநூலின் ஆறாம் பாட்டாக அமைந்தது மதுரைக் காஞ்சி. அது பாண்டியன் நெடுஞ்செழியனுடைய சிறப்பைக் கூறுகிறது. இப்பாட்டினைப் பாடியவர் மாங்குடி மருதனார். மதுரைக் காஞ்சியின் தலைவனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துப் போரிலே சேரன் சோழன் என்னும் முடியுடை மன்னர் இருவரையும் குறுநில மன்னர் ஐவரையும் வென்று புகழ் கொண்டவன்... ஆகையால் இப்பாண்டியன், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பெயர் பெற்றான். இவன் கடைச்சங்க காலத்தில் இருந்தவன். கடைச்சங்க காலம் என்பது ஏறக்குறைய கி.பி. 300-க்கு முற்பட்ட காலம் என்பது பல அறிஞர்களின் கருத்து. எனவே, மதுரைக் காஞ்சியின் காலமும், அப்பாட்டுடைத் தலைவனாகிய நெடுஞ்செழியன் காலமும் கி.பி. 300-க்கு முற்பட்ட காலமாகும்.

ஆயின், இக்காலத்துச் சிலர், சரியாக ஆராயாமல் கடைச்சங்க காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு, ஏழாம் நூற்றாண்டு என்று மனம்போனபடி கூற முற்பட்டுள்ளனர். இதனால், கடைச் சங்க காலம் எது என்பதை உறுதியாக அறிய முடியாமல் மாணவர்களும் மற்றவர்களும் இடர்ப்படுகின்றனர். கடைச்சங்க நூலாகிய மதுரைக் காஞ்சியின் காலத்தை ஆராய்வதன் மூலம் கடைச்சங்க காலம் எது என்பதை அறியலாம். ஆகவே இதனை ஆராய்வோம்.

அரசாங்க சாசன ஆராய்ச்சி இலாகாவில் இருந்த கே.வி. சுப்பிர மணி அய்யர், கடைச்சங்க காலத்தைக் கி.பி. 7-ஆம் நூற்றாண்டு என்று கூறியுள்ளார். இவர் “மதுரைக் காஞ்சியின் காலமும் அப்பாட்டுடைத் தலைவன் காலமும்” என்னும் தலைப்புள்ள கட்டுரையை 1911-ஆம் ஆண்டில், “இந்தியப் பழம்பொருள் ஆராய்ச்சி” என்னும் ஆங்கில வெளியீட்டில் எழுதியிருக்கிறார்.' இந்தக் கட்டுரையிலே இவர், சிறப்பாக வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனத்தை ஆதாரமாகக் கொண்டு,

1. The Date of Maduraik-Kanchi and its hero - The Indian Antiquary, Vol. 40. 1911, P.P.224-229.

  • இரா. பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர். 1961.