பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

69

எனவே, முதுகுடுமிப் பெருவழுதியைக் களப்பிரர் வென்று பாண்டி நாட்டினைக் கைப்பற்றினார்கள் என்று சுப்பிரமணிய ஐயர் கூறுவது சாசனச் சான்றுக்கு மாறுபட்டதாகும். ஆகவே, அவருடைய முடிவு முற்றிலும் தவறாகிறது.

இரண்டாவதாக:

பாண்டியன் மரபில் வந்த கடுங்கோன் என்னும் அரசன், களப் பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான் என்றும் கடுங் கோன் காலத்தில் முதற் சங்கம் அழிந்தது என்றும் சுப்பிரமணிய ஐயர் தமது கட்டுரையில் கூறுகிறார். இதில் முற்பகுதி சரியானது; பிற்பகுதி தவறானது. கடுங்கோன் என்னும் பாண்டியன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான் என்பது வேள்விக்குடி சாசனத் தின்படி உண்மையே. ஆனால், இந்தக் கடுங்கோன் காலத்தில்தான், இறையனார் களவியல் உரையின்படி, தலைச் சங்கம் அழிந்தது என்று கூறுவது தவறானது.

பாண்டியன் கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டி நாட்டை மீட்டுக்கொண்டான் என்பதை வேள்விக்குடி சாசனம் இவ்வாறு கூறுகிறது:

“கௗபரனென்னுங் கலியரசன் கைக்கொண்டதனை இறக்கிய பின் படுகடன் முளைத்த பருதிபோல பாண்டியாதிராசன் வெளிப்பட்டு விடுகதிரவிரொளி விலக வீற்றிருந்து வேலை சூழ்ந்த வியலிடத்துக் கோவுங் குறும்பும் பாவுடன் முருக்கிச் செங்கோலோச்சி வெண்குடை நீழற்றங்கொளி நிறைந்த தரணி மங்கையைப் பிறர்பாலுரிமை திறவிதினீக்கித் தன்பா லுரிமை நன்கன மமைத்த மானம் பேர்த்த தானை வேந்தன் னெடுங்கா மன்ன ரொளி நகரளித்த கடுங்கோனென்னுங் கதிர்வேற் றென்னன்.”

இவ்வாறு வேள்விக்குடி சாசனம் கூறுவதனாலே, கடுங்கோன் களப்பிரரிடமிருந்து பாண்டி நாட்டை மீட்டுக் கொண்டான் என்பது தெரிகிறது. ஆனால், இந்தக் கடுங்கோன் காலத்தில் முதற் சங்கம் அழிந்தது என்று சுப்பிரமணிய ஐயர் கருதுவது தவறு. இது பற்றி வேள்விக்குடி சாசனம் ஒன்றுமே கூறவில்லை. இந்தச் சாசனம் கூறுகிற கடுங்கோன், அதாவது, களப்பிரரிடமிருந்து பாண்டி நாட்டை மீட்டுக் கொண்ட பாண்டியன் கடுங்கோன், முதற்சங்க காலத்தில் இருந்த கடுங் கோன் அல்லன். அவன் வேறு, இவன் வேறு. கடுங்கோன் என்னும்