பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

என்னும் தெய்வங்களைப் பற்றிச் சங்கநூல்களில் பல செய்திகள் கிடைக்கின்றன. ஆனால், வருணனைப் பற்றிய செய்திகள் கிடைக்க வில்லை. இதனால், கடைச்சங்க காலத்திலேயே வருணன் வழிபாடு மறைந்துவிட்டது என்று கருதலாம். வருணன் வழிபாடு மறைந்ததற்குக் காரணமும் உண்டு. அஃதென்ன காரணம் என்றால், மணிமேகலை என்னும் கடற்காவல் தெய்வத்தின் வழிபாடு புதிதாகப் புகுந்ததுதான். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலே பௌத்த மதம் தமிழ் நாட்டில் இடம் பெற்றது. பௌத்த மதத்தின் சிறு தெய்வங்களில் மணிமேகலா தெய்வமும் ஒன்று. மணிமேகலை கடற்காவல் தெய்வம். கடற் காவல் தெய்வம். கடலில் செல்பவர்களுக்கு இடுக்கண் நேராமல் பாதுகாக்க வேண்டியது மணிமேகலையின் கடமை. எனவே, பௌத்த சமய மணிமேகலை வந்தபிறகு பழைய வருணன் வணக்கம் பையப் பைய மறைந்து போயிற்றுப் போலும். இக்காரணத்தினால் போலும் கடைச் சங்க நூல்களிலே வருணனைப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை.

தொல்காப்பியத்திலே வருணன் பெயர் கூறப்பட்டது. பிறகு சிலப்பதிகாரத்திலே வருணனைப்பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அக்குறிப்பிலும் வருணன் என்னும் பெயர் கூறப்படாமல் கடற்தெய்வம் என்று மட்டும் கூறப்படுகிறது.

“கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் கடற்தெய்வங் காட்டிக்காட்டி யரியசூன் பொய்த்தார் அறனிலரென் றேழையம்யாங் கறிகோமைய' (சிலம்பு : கானல்வரி – 5)

‘பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் தெய்வநின் மலரடி வணங்குவதும்

(சிலம்பு : கானல்வரி – 51).

இவையன்றி, வருணனைப் பற்றிய வேறு குறிப்புகளைச் சங்க நூல்களில் நான் காணவில்லை. ஆகவே, இத்தெய்வத்தைப்பற்றிய முழு வரலாறு நமக்குக் கிடைக்கவில்லை. கி.பி.2-ஆம் நூற்றாண் டிலேயே வருணன் வழிபாடு தமிழ்நாட்டில் மறக்கப்பட்டு மறைந்து போயிற்று என்று கருதலாம். ஆனால், வருணன் வழிபாடு மிகப் பழங் காலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துவந்தது என்பதில் சிறிதும் ஐயமில்லை.

தமிழரைப்போலவே ஆரியரும் வருணனை வணங்கினார்கள். ஆனால், தமிழரின் வருணன் வேறு; ஆரியரின் வருணன் வேறு.