பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

திருமால், வருணன் முதலிய தெய்வங்கள் பின் அணியில் நின்றன. அதாவது, பழைய தெய்வங்கள் சிறு தெய்வங்களாகக் கருதப்பட்டன. னால், இத்தெய்வங்களின் வணக்கம் மறைந்துவிடவில்லை.

இலங்கைத் தீவின் தென்கேடியில் தேவுந்தர நகரத்தில் இருந்த உபுல்வன் (வருணன்) கோயில் போர்ச்சுகீசிய மதவெறியர்களால் தகர்த்து அழிக்கப்பட்டபோதிலும், அத்தெய்வத்திற்கு ஆண்டுதோறும் விழா நடைபெறுகிறதாம். அவ்விழாவில் வருணனுடைய முத்துக் குடை ஊர்வலமாகக் கொண்டுபோகப்படுகிறதாம். வருணன், கடலுக்குத் தெய்வம் ஆகையால், கடலில் கிடைக்கும் சிறந்த பொருளாகிய முத்தினால் குடையமைத்து வருணனை வழிபடுகிறார்கள் போலும்.

இலங்கையில் இருந்த வருணன் வழிபாடு, வடஇந்தியாவி லிருந்து ஆரியர்கள் இலங்கையில் புகுத்திய வழிபாடு என்று சிங்கள அறிஞர்கள் கருதுகிறார்கள். இது தவறான கருத்து, இலங்கைக்கு அருகில் உள்ள தமிழ்நாட்டிலே, சங்க காலத்திலே வருணன் வழிபாடு நிகழ்ந்து வந்தது என்னும் உண்மையை அவர்கள் அறியார். அறிந் திருந்தால் தமிழ் நாட்டிலிருந்து வருணன் வழிபாடு இலங்கைக்குச் சென்றது என்னும் உண்மையை ஒப்புக் கொள்வார்கள். “வருணன் மேய பெருமணல் உலகம்” என்னும் தொல்காப்பிய சூத்திரத்தை ஓதியுணர்ந்து அவர்கள் உண்மையறிவார்களாக.

வருணன் வழிபாடு தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண் டிலேயே மறைந்துவிட்டது. ஆனால் அந்த வழிபாடு இலங்கையில் சமீபகாலம் வரையில் நிகழ்ந்து வந்தது. ஏன்? கோயில் அழிந்து விட்டபோதிலும், இன்றும் வருணன் திருவிழா நடைபெறுகிறது!

வருணனைப் பற்றிய வேறு செய்திகளைப் பின்னர்க் கூறுவோம்.