பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

-

151

இனி மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமண மலைகளை ஆராய்வோம். மதுரையைச் சூழ்ந்து எட்டுமலைகள் உள்ளன என்றும் அவ்வெட்டு மலைகளிலும் எண்ணாயிரம் சமணமுனிவர் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றன. ஒரு மலையில் ஆயிரம் சமணமுனிவர் வீதம் எட்டு மலைகளில் எண்ணாயிரம் முனிவர் வாழ்ந்திருந்தார்கள். ஆயிரம் முனிவர் என்று கூறுவது குறிப்பிட்ட தொகையையன்று; பெருந் தொகையினர் என்பது கருத்து. எட்டு மலைகளில் எண்ணாயிரவர் என்றால் எட்டுமலைகளில் தவஞ்செய்திருந்த பெருந் தொகையான சமண முனிவர்கள் என்பது கருத்து. இந்த எட்டுமலைகளில் இருந்த எண்ணாயிரம் சமணரும் கழுவேறினார்கள் என்று பெரிய புராணம் கூறுகிறது. "எண்பெருங்குன்றத்து எண்ணாயிரவரும் ஏறினார்கள் என்பது பெரிபுராண வாசகம்.

""

தக்கயாகப் பரணியிலும் எண்பெருங் குன்றங்கள் கூறப்

படுகின்றன.

“வேதப் பகைவர் நம்முடம்பு

வீங்கத் தூங்கும் வெங்கழுவிற்

சேதப்படும் எண்பெருங் குன்றத்

தெல்லா வசோகும் எரிகெனவே.

(218-ஆம் தாழிசை.)

இதற்குப் பழைய உரை இவ்வாறு கூறுகிறது. "எண் பெருங் குன்றாவன: யானை மலையும், நாகமலையும், சுணங்கமலையும், செப்புமலையும், வெள்ளிமலையுமென மதுரையைச் சூழ்ந்திருப்பன என உணர்க.

இவ்வுரையில், மதுரையைச் சூழ்ந்திருந்த ஐந்து சமணர் மலைகளின் பெயர்கள் கூறப்படுகின்றன. மூன்று மலைகளின் பெயர்களை ஏட்டில் சிதல் அரித்து விட்டபடியினாலே மறைந்து விட்டன. இப்பெயர்களில் சுணங்கமலை, செப்புமலை, வெள்ளிமலை என்பன எவை என்பது தெரியவில்லை. யானைமலையும், நாகமலையும் மதுரைக்கருகில் உள்ளன.

சமணர் வழங்கிவரும் ஒரு செய்யுள் எட்டுமலைகளின் பெயரைக் கூறுகிறது. அச்செய்யுள் இது:

"பரங்குன் றொருவகம் பப்பாரம் பள்ளி

யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்