பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

66

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

"தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்ற

நிவந்தோங்கு செங்கோ னீணில வேந்தன் போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி

என்னோ டிவர்வினை யுறுத்த தோவென உண்ணா நோன்பொ டுயர்பதிப் பெயர்த்ததும்

என்று சிலப்பதிகாரம் (நீர்ப்படைக்காதை) கூறுகிறது.

சல்லேகனை என்பது தமிழில் வடக்கிருத்தல் என்று கூறப்பட்டது. வடக்கிருத்தல் என்னும் பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்வோம். சமணர் சல்லேகனை இருக்கும் போது வடக்குநோக்கி அமர்வது வழக்கம். வடக்குப் புண்ணிய திசை என்பது அவர்கள் கொள்கை. ஏனென்றால் சமணசமயப் பெரியார்களாகிய தீர்த்தங்கரர்கள் யாவரும் வடக்கே வீடுபேறடைந்தனர். முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனப்படும் ரிஷபர் கயிலாய மலையில் வீடுபேறடைந்தார். நேமிநாதர் என்னும் தீர்த்தங்கரர் வட இந்தியாவில் கிர்நார் என்னும் நகரில் வீடுபேறடைந்தார். மற்ற எல்லாத் தீர்த்தங்கரர்களும் வட இந்தியாவில் வீடுபேறடைந்தனர். ஆகவே, வடக்குத் திசையைப் புண்ணியத் திசையாகக் கொண்டு வடக்கு நோக்கியிருந்து சல்லேகனை செய்தனர். ஆகவே, வடக்கு அமர்ந்து நோற்கப் படுவதனால், சல்லேகனைக்கு வடக்கிருத்தல் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சங்க காலத்தில் இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் பரவியிருந்தது. சமண சமயத்தவர் மட்டுமன்றி, அச் சமயத்தவர் அல்லாதவர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தி சங்க நூல்களில் கூறப்படுகிறது.

சேரமான் பெருஞ்சேரலாதனும், சோழன் கரிகாற் பெரு வளத்தானும் வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் போர் செய்தனர். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் முதுகில் புறப் புண் ஏற்பட்டது. புறப்புண் என்பது முதுகுப்புறத்தில் புண்படுதல். வீரர்கள், போரிடும்போது தமது மார்பில் புண்பட்டால் அதைப் பெருமையாகக் கருதுவார்கள். முதுகில் புண்பட்டால் அதை அவமானமாகக் கருது வார்கள். தற்செயலாகப் போரிலே புறப்புண் ஏற்பட்டது பெருஞ் சேரலாதனுக்கு. அதனால் பெருங்கவலை யடைந்தான்; தீராத்துயரம் ஏற்பட்டது. ஆகவே, அவன் உண்ணாவிரதம் இருந்து (வடக்கிருந்து) உயிர்விட்டான். இச்செய்தியைப் புறநானூறு 65, 66 ஆம் செய்யுள் களாலும் அவற்றின் உரையாலும் அறியலாம்.