பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

பாண்டியனை அச்சுறுத்தி வசப்படுத்தச் சமணர் ஏழுகடல்களை அழைத்துக் காட்டினார் என்று கூறப்பட்டதை, பிற்காலத்தில் சிவ பெருமான் செய்ததாக மாற்றி அமைத்துக் கொண்டு, ஏழுகடலழைத்த திருவிளையாடல் என்று பெயர் கொடுத்தனர். இதில், பாண்டியன் மகளான தடாதகைப் பிராட்டியாரைச் சிவபெருமான் மணஞ்செய்த பிறகு தடாதகையின் தாயார் நீராடுதற்பொருட்டுச் சிவபிரான் தமது ஆற்றலினால் ஏழுகடல்களை மதுரைக்கு வரவழைத்துக் கொடுத்தார் என்று கதை கூறப்பட்டுள்ளது.

சைவர் கட்டிய கதையில் ஏழுகடல் என்பது, மேட்டுப்பட்டிக் கிராமத்தில் சித்தர்மலையிலுள்ள ஏழுகடல் என்னும் சுணையையன்று, சொக்கநாத சுவாமி கோயிலுக்கு முன்பாகப் பிற்காலத்தில் ஏழுகடல் அல்லது சப்தசாகரம் என்னும் பெயரால் அமைக்கப்பட்ட குளத்தைக் குறிக்கிறது. ஏழுகடல் தீர்த்தம் என்றும் இது கூறப்படும் இக்குளம் சக ஆண்டு 1438 இல் (கி.பி. 1516 இல்) சாளுவ நரச நாயகன் நரசையன் என்பவரால் அமைக்கப்பட்ட தென்பது இந்தச் சப்தசாகரத் தீர்த்தக் கரையில் உள்ள சாசனத்தினால் தெரிய வருகிறது.2

சமணர் உறையூரை அழித்ததாகக் கூறப்பட்ட கதையும் பிற் காலத்தில் மாற்றப்பட்டு, சிவபெருமான் சாபத்தினால் மண்மாரி பெய்து உறையூர் அழிக்கப்பட்டதாகப் புராணக் கதை கற்பிக்கப்பட்டது. இச் செய்தியை செவ்வந்திப் புராணம், உறையூர் அழித்த சருக்கத்தில் காண்க.

இவ்வாறு கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் காலத்தில் இல்லாத கதைகள், கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் காலத்தில் சமணர் செய்ததாக வழங்கப்பட்டுப் பின்னர் கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் சிவபெருமான் செய்ததாகத் திருத்தியமைக்கப்பட்டன என்பது இதனால் அறியப்படும்.

புராணக்கதைகள் எவ்வாறு புனையப்படுகின்றன என்பதற்கும் இக்கதைகள் காலத்துக்குக் காலம் எவ்வாறெல்லாம் மாறுபடுகின்றன என்பதற்கும் இஃது ஓர் எடுத்துக்காட்டாகும்.

அடிக்குறிப்புகள்

1. An. Rep. Arch. Dept. S. Circle. 1910 - 1911. P. 50 - 51

2.

161 of 1937 - 38. S.I. Ep. Rep. 1937 - 38. P. 104