பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

7. உலோக சாட்சி:

229

இவருக்கு ஒரு முகமும் இரண்டு கைகளும் உண்டு. இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிடும் நிலையில் இருப்பார். வெள்ளை நிறமுள்ளவர். வெண்பட்டாடை அணிந்து இருப்பார் அல்லது வெள்ளைப் பருத்தி ஆடையைக் காஷாயம் (காவி) தோய்த்து அணிந் திருப்பார். உடம்பு முழுவதும் திருநீறு அணிந்திருப்பார்.

8. திரிவிக்கிரமர்:

இவர் இரண்டு முகமும் நான்கு கைகளும் உள்ளவர். மேல் இரண்டு கைகளில் தாமரைப் பூக்களை ஏந்திக் கொண்டு கீழ் இரண்டு கைகளைக் கூப்பிக் கும்பிடும் நிலையில் இருப்பார். நீலக்கல் (கறுப்புக் கல்) பதித்த ஆபரணங்களை அணிந்து கறுப்பு (நீல)ப்பட்டு ஆடை அணிந்து கறுப்பு நிறம் உள்ளவராக இருப்பார்.

9. ஆதித்தர்:

இவருக்கு ஒரு முகமும் இரண்டு கைகளும் உண்டு. கைகளில் செந்தாமரைப் பூக்கள் ஏந்தியிருப்பார். மாதுளம் பூப்போன்ற செந்நிறம் உள்ளவர். சிவப்புக் கல் பதித்த ஆபரணம் அணிந்து சிவந்த ஆடை அணிந்திருப்பார்.

10. சூரியர்:

இவருக்கு ஒரு முகமும் எட்டு கைகளும் உள்ளன. இரண்டு கைகளில் தாமரைப் பூக்கள். மற்ற இரண்டு கைகளில் கண்டா மணியும், தூபகலசமும்; வேறு இரண்டு கைகளில் கமண்டலமும் ஜபமாலையும், மேலும் இரண்டு கைகளில் அபயவரத முத்திரைகள். பொன் நிறம், பொன் ஆபரணங்கள் அணிந்திருப்பார். பொன் நிறப்பட்டாடை உடுத்தியிருப்பார்.

11. அம்சுமாலி:

இவருக்கு ஆறு முகங்கள் உண்டு. சிவந்த நிறம் உள்ளவர். பன்னிரண்டு கைகள். மேல் இரண்டு வல இடக் கைகளில் இரண்டு தாமரை மலர்களைப் பிடித்திருப்பார். வலப்புறம் பார்த்த நான்கு கைகளில் தோமரம், கத்தி, வாள் கேடயம் ஏந்தியிருப்பார். இடப்பக்கம் பார்த்த நான்கு கைகளில் பாசம், அங்குசம், வேல் வேதாளம் ஏந்தியிருப்பார். மற்ற வல இடக் கைகளில் அபயவரத முத்திரையுள்ளன.