பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகச் சமயங்கள் - சமணம்

237

போயின. சிவபெருமானுக்குத் தனிக் கோயில்களும், திருமாலுக்கு தனிக் கோயில்களும் தோன்றலாயின.

சைவ சமயமும், வைணவ மதமும் தனித் தனி மதங்களாகப் பிரிந்து போன பிறகுதான், சிவன் கோவில்களில் சிவ சக்தியாகிய அம்மனுக்குத் தனி ஆலயங்கள் புதிதாகக் கட்டப்பட்டன. இதற்குச் சாசனச் சான்றுகளும் கிடைத்துள்ளன. பிற்காலச் சோழர் ஆட்சியில், அதாவது கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், பழைய சிவன் கோவில்களில் புதிதாக அம்மன் கோவில்கள் அமைக்கப்பட்டன என்னும் செய்தி கல்வெட்டெழுத்து ஆராய்ச்சியினால் அறியப் படுகிறது. இக்காலத்திலேதான் சேக்கிழாரின் பெரிய புராணம் தோன்றியது. இக்காலத்திலேதான் பன்னிரண்டு சைவத் திருமுறைகள் தொகுக்கப்பட்டன. இக்காலத்திற்குப் பிறகுதான் சிவஞானபோதம் என்னும் சைவ சித்தாந்த சாஸ்திரத்தை மெய்கண்ட தேவ நாயனார் இயற்றினார். இவருக்கு முந்தி ஏறத்தாழ கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் திருமூலநாயனார், திருமந்திரம் என்னும் சைவ சமய சாஸ்திரத்தை இயற்றினார், ஆனால், தெளிவான சித்தாந்த சாஸ்திரத்தை இயற்றியவர் மெய்கண்டதேவ நாயனாரே. இவருக்குப் பிறகு சிவஞான சித்தியார், திருக்களிற்றுப்படியார் முதலிய சித்தாந்த சாத்திரங்கள் எழுதப்பட்டன.

கி.பி.10-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சோழ அரசர் காலத்திலும்

அதற்குப் பிற்காலத்திலும், சைவ சமயம் நன்கு வளர்ந்து சிறப்படைந்தது. சோழ அரசர் சைவ சமயத்தைச் சேர்ந்தவ ராகயைால் அவர்கள் பழைய சிவன் கோவில்களைப் புதுப்பித்த தோடு புதிய கோவில்களையும் கட்டினார்கள். கோவில் பூசை முதலியவற்றுக்கு வேண்டிய நிலபுலன்களையும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்கினார்கள். அக்காலத்திலிருந்த சிற்றரசர்களும் பிரபுக்களும் கோவில்களுக்குக் கைங்கரியங்களைச் செய்தார்கள்.

கி.பி. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சோழ அரசர்களும் பாண்டிய அரசர்களும் மறைந்துவிட்டனர். தமிழ்நாடு அந்நியர் ஆட்சிக்குள்ளாயிற்று. முஸ்லிம் மதத்தினரான நவாப்புகளும், பாளையக் காரர்களும் நாட்டையரசாண்டனர். போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர், பிரெஞ்சு காரர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பியர் வர்த்தகத்தின் பொருட்டு நமது நாட்டுக்கு வந்து அரசியலில் தலையிட்டுக் கட்சிகளையுண்டாக்கினர். அதனால், அரசியல் குழப்பங்களும், சண்டைகளும், கலகங்களும்,